அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டுமா ? உச்சநீதிமன்றம் இன்று முடிவு!!!

அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடுவதற்காக நீட் தேர்வு  குறித்து மாணவர்களை தூண்டிவிட்டு வருவதாகவும், இதனால்தான் அனிதா  தற்கொலைக்கு தூண்டப்பட்டதாகவும்  மணி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு உள்ளது.

மாணவி அனிதா மரணம் தொடர்பாக வழக்கறிஞர்  ஜி.எஸ்.மணி என்பவர் உச்சநீதிமன்றத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அதில் நீட்’ தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற பெயரில் அரசியல் லாபத்துக்காக மாணவர்களை தூண்டி விட்டு சில கட்சிகள் ஆதாயம் தேடுவதாகவும், இதுபோன்ற தூண்டுதல் காரணமாகவே மாணவி அனிதா தற்கொலை முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே மாணவி அனிதா தற்கொலை குறித்து ஓய்வுபெற்ற சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஒருவரின் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் சட்டம்–ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சட்டவிரோதமான போராட்டங்களுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் கூறி இருக்கிறார்.

இந்த மனு தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

ஆனால் அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தினசரி வழக்கு விசாரணை பட்டியலில், இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.