ஆந்திர மாநில துணை முதல்வரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான அம்ஜத் பாஷா மற்றும் மனைவி, மகளுக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதுவரை இந்தியாவில் 907,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,727 பேர் உயிரிழந்துள்ளனர். 572,112 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், ஆந்திராவில் கொரோனாவால் நேற்று வரை 27,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14,393 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். 12,533 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அம்மாநிலத்தில் 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசியல் தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதல்வரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமானவர் அம்ஜத் பாஷா. இவருக்கு கடப்பாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது மனைவி மற்றும் மகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களுக்கும் தொற்று இருப்பது 2 தினங்களுக்கு முன் உறுதியானது. அவர்கள் திருப்பதி சுவிம்ஸ் கோவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.