இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக 5 துணை முதல்வர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். அனைத்து சாதிகளை சேர்ந்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார். 

 

ஆந்திராவில் நடந்து முடிந்து மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களில் வெற்றி பெற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் இன்று எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. 

அப்போது இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சரவையில் 5 துணை முதல்வர்களையும், 25 அமைச்சர்களையும் நியமிக்க உள்ளதாக ஜெகன் மோகன் அறிவித்தார். இவர்களின் பதவிக்காலம் 30 மாதங்கள் என தீர்மானம் செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., பிசி, சிறுபான்மையினர், கபு ஆகிய 5 இனத்தவர்களை சேர்ந்தவர்கள். 

ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன்மோகன் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்த மாநிலமும் அரசை உன்னிப்பாக கவனித்து வருவதால் ஒவ்வொரு நடவடிக்கையையும் மிக கவனமாக எடுக்க வேண்டும் எனவும், அரசு நலத்திட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வரவும் தான் முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.