நல்ல மனிதர்,  மக்களுடைய தேவைகளை புரிந்து சரியான திட்டங்களை மேற்கொண்டு அரசையும், மக்களையும், நல்வழியில் அழைத்துச் செல்லும் தலைவர், என்பதையெல்லாம் தாண்டி ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை தமிழக அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர். 

தமிழக முத்ல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு 8 டி.எம்.சி, தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. முன்பெல்லாம் தமிழகம் பக்கத்து மாநிலங்களில் தண்ணீர் கேட்டால் அந்த தண்ணீர் வருவதற்குள் தாவு தீர்ந்து விடும். ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி தமிழகத்தின் கோரிக்கையை அணுகும் விதமே பாராட்டும் வகையில் இருக்கிறது.

உண்மையிலேயே நல்ல மனுஷன் ரெட்டி காரூ என்பதற்கு வெளிவராத தமிழக பாசம் இதோ.. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய கிருஷ்ணா நதி நீரை தமிழகம் போராடி தான் பெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் சந்திரபாபு நாயுடுவும் விதிவிலக்கு அல்ல. ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரான பிறகு அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் எளிது என்கிறார்கள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள்.

கோரிக்கை வைத்தவுடன் ஜெகன் மோகனிடம் வளவளவென பேச்சே இருக்காதாம். ஆந்திராவுக்கு தேவையான தண்ணீர் இருக்கிறதா என்று மட்டுமே அம்மாநில அதிகாரிகளிடம் கேட்பாராம். இருக்கிறது என்று அதிகாரிகள் சொன்னால் அடுத்த நிமிடமே தண்ணீரை திறந்து விடுங்கள் என தெலுங்கில் சொல்லி விட்டு இருமாநில பேச்சுவார்த்தையை முடித்து வைத்து விட்டு கிளம்பி விடுவாராம்.

நல்ல மனுஷனா இருக்கிறாரே ஆந்திர முதல்வர் என நெகிழ்ந்து போகிறார்கள் அவரை ஒவ்வொரு முறையும் சந்திக்கும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள். அவர்களது சந்தோஷத்திற்கு முக்கிய காரணமும் இருக்கிறது. கிருஷ்ணா நீர் திறந்து விடுவது தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் போடப்பட்டபோது ஆந்திராவுக்கு 300 கோடிக்கு மேல் தர தமிழக அரசு ஒப்பு க் கொண்டுள்ளது. ஆனால், இந்த நிமிடம் வரை ஆந்திராவுக்கு, தமிழக அரசு முழுமையாக வழங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தோடு நட்பு பாராட்டியே வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி.