andhra police arrested tamilnadu mbbs student in the name of red wood trafficking
செம்மரம் கடத்தியாக தமிழக மருத்துவ மாணவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ள சம்பவம் மாணவர்களிடையே கொந்தளிப்பையும் தமிழ் மக்களிடையே கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஜீத் என்பவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பு படித்து வருகிறார். தனது செலவுகளுக்காக பகுதி நேரமாக கார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு பகுதி நேர ஓட்டுநராக திருப்பதி அருகே கரக்கம்பாடி சாலையில் காரில் சென்றுள்ளார். அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் காரை வழி மறித்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த அஜீத்தையும், கர்நாடக மாநிலம் ஒஸ்கோட்டைச் சேர்ந்த இயேசு என்பவரையும் போலீசார் விசாரித்துள்ளனர். செம்மரம் கடத்துவதற்காக மங்களம் அருகே மறைத்து வைத்திருந்த 9 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி, அவர்களை கைது செய்தனர்.

இதனால் அச்சமடைந்த அஜீத், தனக்கும் செம்மரக்கட்டைகளை கடத்திய கும்பலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் தான் ஒரு மருத்துவ மாணவர், பகுதி நேர ஓட்டுநராக பணியாற்றுவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் அஜீத்தை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களுக்கு அனுமதி மறுத்ததோடு அவர்களுக்கு பதிலளிக்கவும் போலீசார் மறுத்துவிட்டனர்.
செம்மரம் கடத்தும் கும்பலையும் அவர்களை ஏவிவிட்ட முதலாளிகளையும் பிடிக்காமல் மருத்துவ மாணவரை ஆந்திர போலீசார் கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரம் கடத்தியதாக கூறி ஏற்கனவே தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டு கொன்றுள்ளனர். இந்த விவகாரத்தில் கூலித் தொழிலாளிகளை சுட்டு கொல்லும் ஆந்திர போலீசார், செம்மரங்களை கடத்தி வியாபாரம் செய்யும் முதலாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என சீமான் போன்றோர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
