அதிமுக ஆட்சி குறித்து அன்புமணி பேசியது கட்சி தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கமளித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- தமிழகம் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து தேசிய விருதுகளை பெற்று வருகிறது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். மக்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள். மக்கள் அளிக்கும் தீர்ப்பு எங்களுக்கு நியாயமானது. எதிர்கட்சித் தலைவர் மட்டும் குறை சொல்லி வருகிறார். தேவையில்லாத குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருவது வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்றார்.

மேலும், அன்புமணி மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுகவை விமர்சனம் செய்வது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் பாமக அன்புமணி ஒருபோதும் அதிமுக அரசை விமர்சிக்கவில்லை. அவர்களுடைய கட்சி தொண்டர்களை ஊக்குவிப்பதற்காக இப்படி அவர் பேசியுள்ளார். எல்லா கட்சிகளுக்கு தொண்டர்கள் மற்றும் கட்சி தான் முக்கியம். அதன் அடிப்படையிலேயே அந்த கருத்தை பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார்.  

எல்லோருமே தலைவர் ஆகணும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆவலுடன் இருந்து வருகின்றனர். கூட்டணி வரும்போது சில இடங்களில் விட்டுகொடுக்க வேண்டிய சூழ்நிலை வருகிறது. இதனால், அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சோர்வு அடைகின்றனர். இந்த சோர்வை போக்குவதற்காக சில கருத்தைகளை சொல்லி தொண்டர்கள் இடத்தில் நல்ல எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதால் பாமக தயவால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது என அன்புமணி அப்படி பேசியுள்ளார் என விளக்கமளித்துள்ளார். 

ஆட்சி மொழிக்குழு ஆய்வு செய்ய வருவதாக எந்த தகவலும் வரவில்லை. பொன்.ராதாகிருஷ்ணனின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். எங்களை பொறுத்தவரை மக்கள் தான் எஜமானர்கள், நீதிபதிகள் அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும் என்றார்.