பள்ளிக் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து, விவாதம் நடத்த தயாரா என கேட்ட அமைச்சர் செங்கோட்டையனுக்காக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் மேடை அமைத்து காத்து கொண்டிருக்கிறார். 

13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் வழங்கிய செங்கோட்டையன் இப்போது தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கும் அதேபோல் கலந்தாய்வு நடத்தாமல், கையூட்டு வாங்கிக்கொண்டு இடமாறுதல் ஆணை வழங்குவது ஏன் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அன்புமணி ராமதாஸ் நேரடியாக விவாதம் நடத்த தயாரா என கேள்வி எழுப்பினார். 

அதற்கு சென்னை ராஜ அண்ணாமலை புரத்தில் இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்தலாம் என அன்புமணி நேரம் கொடுத்தார். 

ஆனால் செங்கோட்டையனோ அவர்கள் மேல் வழக்கு உள்ளது அதனால் அவர்களுடன் வாதிட மாட்டேன் என ஜகா வாங்கினார். 

இந்நிலையில் செங்கோட்டையனுக்காக காத்திருப்பேன், அவர் வரவேண்டும், என்மீதான குற்றச்சாட்டுகளை விவாதத்தின்போது அவர் முன்வைக்கலாம். நான் பதிலளிக்கிறேன் என தெரிவித்திருந்தார். 

இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்க்கும் வகையில், தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதன்படி அமைச்சர் செங்கோட்டையனுக்காக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மேடை அமைத்து காத்து கொண்டிருக்கிறார். ஆனால் இதுவரை அமைச்சர் செங்கோட்டையன் வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.