நாங்கெல்லாம் வெயிலில் காஞ்சிட்டிருக்கோம் .. நீங்க சேர்ல உட்கார்ந்திட்டிருக்கீங்க.. 10 நாட்களுக்கு உட்காரக் கூடாது என அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் ஆரணி தொகுதி அதிமுக வேட்பாளர் எழுமலையை பாமக அன்புமணி மிரட்டிய சம்பவம் அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து ஓரணியாக தேர்தலை சந்திக்கின்றன.

இந்த கூட்டணில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தருமபுரி தொகுதியில் அன்புமணி போட்டியிடுகிறார்.
அன்புமணியும், ராமதாசும் பாமக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். 

வட மாவட்டங்களில் வன்னியர் பெல்ட்டாக கருதப்படும் ஆரணி தொகுதியில் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணு பிரசாத் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து அதிமுக சார்பில் செஞ்சி ஏழுமலை போட்டியிடுகிறார். இவர் தற்போது சிட்டிங் எம்.பி.யாகவும் உள்ளார். இதே போல் இந்த தொகுதியில் அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இநநிலையில் தனது மைத்துனரை எப்படியாவது மண்ணை கவ்வ வைக்க வேண்டும் என அன்புமணி செம காண்டில் உள்ளார். இதையடுத்து இன்று ஆரணியில் ஏழுமலையை ஆதரித்து அமைச்சர் சி.வி.சண்முகம், அன்புமணி உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியில் இன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அன்புமணி பேசினார். அப்போது அங்கு அமர்ந்திருந்த அமைச்சர் சண்முகத்துடன் வேட்பாளர் ஏழுமலையும் அமர்ந்திருந்தார், அன்புமணி பேசிக் கொண்டிருந்தபோது அங்கு சேரில் உட்கார்ந்திருந்த எம்.பி.ஏழுமலையைப் பார்த்து, நாங்ககெல்லாம் இங்கு வெயிலில் காய்கிறோம்…நீங்க மட்டும் ஏன் உட்கார்ந்திருக்கீங்க என மிரட்டல் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் 10 நாளைக்கு இனி நீங்க சேரிலே உட்காரக்கூடாது என கடுமையாக பேசியதையடுத்து ஏழுமலை மற்றும் அமைச்சர் உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு பொது வெளியில் அத்தனை பொது மக்கள் மத்தியில் எம்.பி, வேட்பாளரை அன்புமணி மிரட்டியது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.