கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க அணியில் போட்டியிட்ட பா.ம.காவால் ஒரு தொகுதியில் மட்டுமே வெல்ல முடிந்தது. ஆனால் அனைத்து தொகுதிகளிலும் கணிசமான வாக்குகளை அந்த கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். இதனால் கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ம.க தனித்து களம் இறங்கியது. ஆனால் ஒரு இடத்தில் கூட பா.ம.க வேட்பாளர்களால் வெற்றி பெற முடியவில்லை.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியோடு எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் ராமதாஸ் மற்றும் அன்புமணியின் நிலைப்பாடாக உள்ளது. இது குறித்து சூசகமாகவும், வெளிப்படையாகவும் அன்புமணி கூறி வருகிறார். ஆனால் யாருடன் கூட்டணி என்கிற முடிவை எடுப்பதில் தான் அன்புமணிக்கு தடுமாற்றம் இருப்பதாக கூறுகிறார்கள். தி.மு.கவும் பா.ம.கவுடன் கூட்டணிக்கு ஆர்வமாக உள்ளது.

இதே போல் அ.தி.மு.க தரப்பும் கூட பா.ம.கவை கூட்டணியில் இணைத்து மெகா கூட்டணி அமைக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இல்லாமல் கூட்டணி குறித்து பா.ம.கவுடன் கடந்த ஒரு மாத காலமாகவே பேசப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளையும் தான் கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்புமணியும், ராமதாசும் விளாசி வருகிறார்கள்.

எனவே என்ன காரணம் கூறி இவர்கள் இருவரில் ஒருவரை கூட்டணிக்கு தேர்வு செய்வத என்பது தான் பா.ம.கவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தி.மு.க மற்றும் அ.தி.மு.கவை விமர்சிப்பதை கடந்த ஒரு மாத காலமாகவே ராமதாஸ் குறைத்துக் கொண்டார். அன்புமணி சுத்தமாக இரண்டு கட்சிகளையும் வெளிப்படையாக விமர்சிப்பதில்லை. பொதுவாக இரண்டு கட்சிகளும் என்று கூறி தான் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இதன் மூலம் இரண்டில் ஒரு கட்சியை கூட்டணிக்கு தேர்வு செய்வது என்கிற முடிவுக்கு அன்புமணி வந்துவிட்டதாக பா.ம.க வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. தி.மு.க தரப்பில் நான்கு தொகுதிகள் வரை தர பேசப்படுவதாகவும் அதி.மு.க தரப்பில் இருந்து தொகுதி எண்ணிக்கை குறித்து ஸ்ட்ராங்கான எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் 3வது அணிக்கான ஆப்சனையும் அன்புமணி ஓபனாகவே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தினகரன், கமல் மற்றும் அன்புமணி இணைந்து ஒரு கூட்டணி அமைப்பது குறித்து ஏற்கனவே பேச்சு அடிபட்டது. ஆனால் தினகரன் தற்போது இந்த கூட்டணி குறித்து ஆர்வம் இல்லாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே காங்கிரசை தி.மு.கவில் இருந்து கழட்டி புதிய அணி உருவாக்கினால் எப்படி இருக்கும் என்று ஒரு பக்கம் பா.ம.க யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியோ? கூட்டணி விவகாரத்தி கடந்த இரண்டு தேர்தலை போல் இல்லாமல் இந்த தேர்தலில் பா.ம.க தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.