போர்க்காலங்களில் நாட்டைக் காக்க தங்களின் உயிரை பணயம் வைத்து போர் புரிபவர்கள் நமது ராணுவ வீரர்கள்தான். அதேபோல், கண்ணுக்கு தெரியாத எதிரியான கொரோனா வைரஸ் கிருமியை எதிர்த்து களத்தில் நின்று போராடுபவர்கள் மருத்துவர்கள்தான். அவர்களை நாம் கடவுளாகப் பார்க்க வேண்டும். அவர்களை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக் கூடாது. நாட்டைக் காக்கும் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களை 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்கிறோம். அதேபோல், மக்களைக் காக்க கொரோனாவுடன் போரிட்டு உயிரிழக்கும் மருத்துவர்களுக்கும், ராணுவ வீரர்களுக்கு எப்படி மரியாதை செய்கிறோமோ, அதேபோல் இறுதி மரியாதை செய்ய வேண்டும். 


ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை பாராட்டும் வகையில், ஊரடங்கின் போது ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி சிறப்பிக்கிறோம். மறுபுறம் உயிர்க்காக்கும் முயற்சியில் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முரண்பாடு தான் மனதைக் காயப்படுத்துகிறது என்று பாமக இளைஞரணி தலைவரும் மருத்துவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பா அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சி அளித்தது என்றால், அவரது உடலை கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் இன்னும் அதிக வேதனையை அளிக்கிறது. கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தங்களின் உயிரை இழந்த மருத்துவர்களுக்கு இத்தகைய அவமதிப்புகளை இழைப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனரும், புகழ்பெற்ற நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மருத்துவம் பயனின்றி காலமானார். கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அவரது உறவினர்களும், நண்பர்களும் சென்றபோது அங்குள்ள மக்கள் ஒன்று கூடி, “கொரோனாவால் உயிரிழந்தவரை தாங்கள் வாழும் பகுதியில் அடக்கம் செய்தால், அவரது உடலில் இருந்து தங்களுக்கும் நோய் பரவி விடும்” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரது உடலை அடக்கம் செய்ய வந்தவர்களை தாக்கியுள்ளனர். அதன்பின் அவரது உடல் வேலங்காடு இடுகாட்டில் காவல்துறை பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.


பொதுமக்களின் இந்த செயல் அவர்களின் அறியாமை, விழிப்புணர்வின்மை, தேவையற்ற அச்சம் இவற்றுக்கெல்லாம் மேலாக சுயநலம் ஆகியவற்றையே காட்டுகிறது. ஒருபுறம் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களை பாராட்டும் வகையில், ஊரடங்கின் போது ஒரே நேரத்தில் கைகளைத் தட்டி சிறப்பிக்கிறோம். மறுபுறம் உயிர்க்காக்கும் முயற்சியில் இறந்த மருத்துவர்களின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த முரண்பாடு தான் மனதைக் காயப்படுத்துகிறது. உண்மையில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதால் அந்த பகுதியில் யாருக்கும் நோய் தொற்றாது. மாறாக உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதுதான் அவர்களிடையே கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதை மக்கள் உணர வேண்டும்.