தமிழக அரசியலரங்கில் கூட்டணி மாற்றம் என்பது வெகு இயல்பான ஒன்றுதான். எந்த அளவுக்கு என்றால், ஒரு கட்சியின் தலைவர், ஒரு ஹோட்டலில் டிஃபன் சாப்பிட்டு கைகழுவியபின், ஈரத்தை துடைத்து எறியும் டிஸ்யூ பேப்பர் போன்றது கூட்டணி. சந்தர்ப்பவாதமாக தேர்தலுக்காக இணையும் அவர்கள், வெற்றியோ அல்லது தோல்வியோ, தேர்தலுக்கு பின் வெகு சாதாரணமாக ஒருவரை ஒருவர் குறைகூறியபடி பிரிந்து கொள்வர். 

இந்த முறை யாரை வன்மையாக எதிர்த்து பிரசாரம் செய்தார்களோ, அதே கட்சியுடன் போய் கை குலுக்குவார்கள். பாவம், மிஸ்டர் பொதுஜனம்தான் தேமே! என்று முழித்துக் கொண்டிருக்கும். ஆனால் கூட்டணி வைத்ததற்காக ஒரு கட்சி இந்த இந்திய அரசியல் மண்ணில் மிக மிக கேவலமாக விமர்சிக்கப்பட்டதோடு, மக்கள் மத்தியிலும் பரிகாசமாக பிரசாரம் செய்யப்பட்டது என்றால் அது பா.ம.க.தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்த காரணத்துக்காக ‘வெட்கமில்லையா?’ என்று ஸ்டாலின் துவக்கி வைக்க, மீடியாக்களும், அரசியல் விமர்சகர்கள் துவைத்து தொங்கவிட்டனர் பா.ம.க.வை இந்த நெகடீவ் வைபரேஷனானது அக்கூட்டணியின் தோல்வியில் பெரும் பங்காற்றியது. 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் உடையுமென எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. - பா.ம.க. கூட்டணியானது, உள்ளாட்சி தேர்தல் வரையில் ஒன்று  சேர்ந்து வந்துவிட்டது. அட! என்று அரசியலரங்கம் ஆச்சரியப்படும் நிலையில், சமீபத்தில் விழுந்த விரிசலானது அன்புமணி ராமதாஸினால் மேலும் பிரிக்கப்பட்டு, உடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது! என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். இதன் அடித்தளமாக அன்புமணியின் சமீபத்திய பேச்சினை சுட்டிக் காட்டுகின்றனர். அதைச் சொல்லி விளக்குவோர்...”அதாவது சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் பா.ம.க.வில் தம்பிகள் படை, தங்கைகள் படை, மக்கள் படை எனும்  மூன்று படைகளை உருவாக்கினார். பா.ம.க.வுக்கு இளைஞர் வாக்கு வங்கியை அதிகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டம் இது. இது ஆரோக்கியமான செயல்தான்.  

இந்நிலையில், சமீபத்தில் விழுப்புரத்தில் இம்முப்படையின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அதில் பேசிய அன்புமணி ’2021 சட்டமன்ற தேர்தலில் பா.ம.க. ஆட்சியைமைத்த பின்னர் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.’ என்று ஒரே போடாகப் போட்டார். இதுதான் அ.தி.மு.க. கூட்டணியினுள் பெரும் கலக களேபரத்தை உருவாக்கியுள்ளது. எதிர்வரும் தேர்தலின் மூலம் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க. படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது. அவ்வளவு பெரிய பா.ஜ.க.வும் கூட இந்த தேர்தலில் ஆள முடியாவிட்டாலும், அமைச்சரவையில் இடம் பிடிக்குமளவுக்கு தமிழகத்தில் கால் ஊன்றிவிட வேண்டும்! எனும் நோக்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் அக்கூட்டணியிலுள்ள ஒரு சிறிய கட்சியான பா.ம.க.வோ இப்படி உடைப்பை எதிர்நோக்கி பேசுவது அதிர்ச்சி தருகிறது எட்டப்பாடிக்கு. அன்புமணியின் இந்த பேச்சுக்கு காரணம் உள்ளாட்சி தேர்தல்தான். பா.ம.க. வலுவாக இருக்கும் வடமாவட்டங்களி மட்டுமே அவர்களுக்கு இடம் ஒதுக்கினர். அதில் பலவற்றிலும் அதிருப்தி அ.தி.மு.க.வினர் எதிர்த்துப் போட்டியிட்டு பா.ம.க.வுக்கு பல்பு கொடுத்துவிட்டனர். விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. ஜெயிக்க காரணமே நாம்தான்! அந்த நன்றியை மறந்துவிட்டு இப்படி உள்ளாட்சி தேர்தலில் உள்ளடி செய்துவிட்டார்களே! இனியும் இவர்களை அண்டி நிற்க கூடாது! என்று முடிவு செய்தே அன்புமணி இப்படி பேசியிருக்கிறார் என்பதே அக்கட்சியின் முக்கியஸ்தர்களின் எண்ணம்.

அதேவேளையில், கூட்டணியை உடைத்துச் செல்லும் நோக்கில் அன்புமணி இப்படி பேசவில்லை. அப்படி சென்றால் கூட்டணி வைக்க ஒரே சாய்ஸ் தி.மு.க.தான். ஆனால் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் ஸ்டாலினோடு அணுசரித்து போகவே முடியாது. மேலும் ஸ்டாலினை தங்களின் மிகப்பெரிய எதிரியாக பார்க்கின்றனர். எனவே அங்கே செல்ல முடியாது. அப்படி இல்லையென்றால் மிக பலவீனமான மூன்றாவது அணியை அமைக்க நேரிடும். அதில் டாக்டர் கிருஷ்ணசாமி போன்ற மிக சிறிய கட்சிகள் மட்டுமே வந்து சேர வாய்ப்புள்ளது. 

இந்த யதார்த்தத்தை நன்கு புரிந்து வைத்துள்ளார் அன்புமணி. எனவே அவர் ‘2021ல் பா.ம.க. ஆட்சி’ என்று பேசியிருப்பது எடப்பாடியாரை மிரட்டிடவே. இப்படி பேசினால்தான் இறங்கி வருவார்கள், உள்ளாட்சி  நிர்வாகத்தின் அடுத்த செட்  தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் உருப்படியான இடத்தை ஒதுக்குவார்கள், அதிருப்தி அ.தி.மு.க. வேட்பாளர்களையும் ஒடுக்குவார்கள்! எனும் எண்ணமே காரணம்! என்றும் சிலர் சொல்கின்றனர். எது எப்படியோ அ.தி.மு.க. கூட்டணியில் ‘உடைப்பு களேபரம்’ உருவாகிவிட்டது உண்மையே!” என்கிறார்கள். கவனிப்போம்ல!