Asianet News Tamil

இந்த ஒன்றை செய்யுங்க.. செங்கல்பட்டில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கலாம்.. மாசு-க்கு பக்கா ஐடியா கொடுத்த அன்புமணி!

தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் அவசரமாகத் தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகளை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தி செய்ய முடியும் என தமிழக மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
 

Anbumani Ramadoss gave idea to TN Government to open chengalpet vaccine centre
Author
Chennai, First Published May 16, 2021, 8:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

இதுதொடர்பாக, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு அன்புமணி ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்று, நெருக்கடியான காலக்கட்டத்தில் திறம்பட செயல்பட்டு வரும் தங்களுக்கு எனது வாழ்த்துகள். கொரோனா வைரஸ் தாக்குதல் உலகின் எந்த நாட்டையும்விட இந்தியாவை மிகவும் மோசமாக தாக்கியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 3.25 லட்சம் கொரோனா நோயாளிகள் சோதனைகள் மூலம் கண்டறியப்படுகிறார்கள். அவர்களில் 10 சதவீதத்துக்கும் கூடுதலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 33,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை அனைத்தும் அதிகாரப்பூர்வமானவை மட்டும்தான். இவர்களைத் தவிர, சோதிக்கப்படாமல் கரோனா தொற்றுடன் வலம் வருபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கொரோனாவை தடுப்பதற்கான பேராயுதம் தடுப்பூசிதான் என்பதை உலகம் முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசி உடனடியாக கிடைப்பதில் பல தடைகள் உள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களில் 10 சதவீதத்துக்கு மட்டும்தான் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டு பல வாரங்கள் ஆகியும் இன்னும் அந்தப் பணி தொடங்கப்படவில்லை. காரணம்... இந்தியாவில் நிலவும் தடுப்பூசி பற்றாக்குறை. தமிழக அரசு அதன் தேவைக்கு மூன்றரை கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியிருப்பது இதை உறுதி செய்கிறது. தமிழக அரசு நினைத்தால், தமிழ்நாட்டுக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை தமிழக அரசு எதிர்பார்க்கும் காலத்தை விட குறைந்த காலத்திலும், குறைந்த விலையிலும் உற்பத்தி செய்ய முடியும்.
2004 -09ஆம் ஆண்டு காலத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் பதவி வகித்த போது, உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்ட உலகத் தரம் வாய்ந்த தடுப்பூசிகளை தயாரிக்கும் நோக்குடன் செங்கல்பட்டு அருகில் 150 ஏக்கரில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை உருவாக்க ஆணையிட்டேன். அதற்காக 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. ஆனால், பின்னர் வந்த அரசுகள் ஆர்வம் காட்டாததால் வளாகப்பணிகள் இன்னும் நிறைவடையவில்லை. ஏறக்குறைய 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், மத்திய, மாநில அரசுகள் நினைத்தால் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, அடுத்த சில மாதங்களில் அங்கு தடுப்பூசி உற்பத்தியை தொடங்க முடியும். அதற்கு சில நூறு கோடி மட்டுமே தேவைப்படும். அது தடுப்பூசி கொள்முதலுக்காக தமிழக அரசு செலவழிக்கும் தொகையைவிட குறைவாகவே இருக்கும்.
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டால், அதில் கீழ்க்கண்ட 7 வகையான தடுப்பூசிகளை உலகத் தரத்தில் உற்பத்தி செய்ய முடியும். அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை உலகம் முழுவதற்கும் ஏற்றுமதி செய்யவும் முடியும். செங்கல்பட்டு வளாகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய 7 தடுப்பூசிகளின் விவரம் வருமாறு:
1. கக்குவான், தொண்டை அடைப்பான், ரணஜன்னி, மஞ்சள் காமாலை பி, இன்ஃப்ளூயன்சா ஆகிய ஐந்து நோய்களுக்கான பெண்டாவேலண்ட் தடுப்பூசி (Pentavalent Vaccine)
2. மஞ்சள் காமாலை B தடுப்பூசி (Hepatitis-B-Vaccine)
3. ஹீமோபைலஸ் இன்ஃப்ளூயன்சா (Haemophilus Influenzae) தடுப்பூசி
4. வெறிநாய்க் கடிக்கான தடுப்பூசி (Rabies Vaccine)
5. மூளைக் காய்ச்சல் தடுப்பூசி (Japanese encephalitis)
6. பிசிஜி தடுப்பூசி (BCG Vaccine)
7. தட்டம்மை &- ரூபெல்லா தடுப்பூசி (Measles & Rubella Vaccine)
மேற்கண்ட 7 தடுப்பூசிகள் மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகின் பல நாடுகளுக்கும் அவசரமாகத் தேவைப்படும் கொரோனா தடுப்பூசிகளையும் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் உற்பத்தி செய்ய முடியும். இது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதும் ஆகும். தமிழக அரசு நினைத்தால் மத்திய அரசிடம் பேசி, தடுப்பூசி வளாகத்தை தனது கட்டுப்பாட்டில் ஏற்று தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க முடியும்.
உலக நாடுகள் அனைத்தையும் தாக்கியுள்ள கொரோனா வைரஸ் உடனடியாக முடிவுக்கு வந்துவிடாது என்றும், அடுத்த சில ஆண்டுகளுக்கு அடிக்கடி உருமாறிக் கொண்டு சமூகத்தில் இருக்கும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும். அதற்கேற்ற வகையில் தடுப்பூசி உற்பத்தி கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கிக்கொள்வது நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் பயனுள்ளதாக அமையும். இந்தியாவின் தரமான தடுப்பூசி தேவையைக் கருத்தில்கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான வரப்பிரசாதம் ஆகும்.
இந்த வளாகத்தை தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தினால், அதற்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளை மட்டுமின்றி, பிற தடுப்பூசிகளையும் உலகத்தரத்துடன் மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும், உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொரோனா உள்ளிட்ட அனைத்து தடுப்பூசிகளையும் தமிழகம் ஏற்றுமதி செய்ய முடியும். தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளை அந்த நிறுவனத்தால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டபோது, அதை தமிழக அரசே ஏற்றுக் கொண்ட வரலாறு உள்ளது. அதேபோல், செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தையும் தமிழக அரசு ஏற்க முடியும்.
எனவே, மத்திய அரசுடன் பேச்சு நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை கூட்டாண்மை நிறுவனமாக நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டை தடுப்பூசி உற்பத்தி மையமாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios