*    திருமணத்துக்கு பத்து பொருத்தம் பார்ப்பார்கள். ஆனால் ஆறேழு பொருந்தியிருந்தாலே போதும் என்பார்கள். நானும் ஆறு பொருத்தம் பார்த்துதான் இந்த தி.மு.க. கூட்டணியில் இணைந்திருக்கிறே. என் சொந்த செலவிலேயே இந்த பகுதி விவசாய மக்களுக்காக, காய்கறி கொள்முதல் செய்யும் மையம் அமைப்பேன்: பாரிவேந்தர். 
(நீங்க பொருத்தம் பார்த்து நிச்சயம் பண்ணினதெல்லாம் ஓ.கே.தான் மிஸ்டர் பாரி. ஆனால், திருமண நாளான தேர்தலன்னைக்கு பெரும்பான்மை மக்கள் வந்து உங்களுக்கு  அட்சதை தூவி ஆசீர்வாதம் பண்ணினால்தானே  கல்யாணம் சிறப்பா நடக்கும்?)

*    எங்க கட்சியின் தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன். மோடி வில்லன். அவரோட அடியாட்கள்தான் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். காமெடியன்கள் ராமதாஸும், அன்புமணியும். இங்கே நடப்பது ‘அடல்ட்ஸ் ஒன்லி ஆட்சி.’: உதயநிதி. 
(அரசியல்ல ‘அ’ கூட தெரியாத அந்த பச்ச மண்ணு விஜய் பிரபாகரன் பேசின பேச்சுக்காக அவரை கழுவிக் கழுவி ஊத்துன மண்ணு இது. முரசொலியோட நிர்வாகியா சில வருஷம் இருந்த நீங்க இப்படி பேசலாமா உதய்? அடல்ட்ஸ் ஒன்லி ஆட்சின்னு நீங்க இவங்களை சொன்னா, பதிலுக்கு அவங்க பழைய பெரியகருப்பன் காணொலிகளை பத்தி பேச ஆரம்பித்தால் காது அழுகிடுமே! தேவையா உதய்? இது தேவையா!)

*    காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை. கடந்த தேர்தலில் மிக மோசமாக தோற்று வெறு 44  தொகுதிகளை வென்றவங்க இந்த முறை நூறு தொகுதிகளை கூட எட்டாத சூழல்தான் இருக்குது: அமைச்சர் தங்கமணி. 
(ஆக இந்த ஐந்து ஆண்டுகளில் காங்கிரஸ் வளர்ந்திருக்குதுன்னு சொல்றீங்க. அதனாலதானே போன தடவையை விட இந்த வாட்டி அதிக சீட் வாங்குவாங்கன்னு சொல்றீங்க! ஆனா அப்படியே நம்ம கட்சியோட நிலமையை சூடுங்க தல. போன தடவ முப்பத்து ஏழு தொகுதியை வின் பண்ணின நாம இந்த வாட்டி இருபது தொகுதிகளில்தான் போட்டியே போடுறோம். நமக்கு எதுக்கு இந்த வாய்?)

*    ஓட்டுக்கு பணம் கொடுப்பதை யாரும் ஊக்குவிக்க வேண்டாம். பணம் கொடுத்து தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ள வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன். 
(அதெப்டி தல அப்படியே வெண்ணெய்யும் சூடாகாம, நெய்யும் கொதிக்கணும் அப்படிங்கிற மாதிரியே  சூசகமா பேசுறீங்க. வறுமைக்கோட்டுக்கு கீழே ஒக்காந்திருக்கிற மக்களுக்கு ரெண்டாயிரம் கொடுக்குறதை நிறுத்துங்க!ன்னு ஓப்பனா எடப்பாடிய பார்த்து தகிரியமா சொல்லுங்களேன் பார்போம்.)

*    தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 90% காப்பியடிக்கப்பட்டவை. பத்து சதவீதம் மட்டுமே ஒரிஜினல், அதுவும் மோசமாக உள்ளது. மொத்தத்தில் அந்த அறிக்கை ஒரு காமெடி படம்: டாக்டர். ராமதாஸ். 
(உங்க பெருந்தன்மைக்கு ஒரு அளவே இல்லையா தல? இந்த நாடாளுமன்ற சீசன்லேயே அடிச்சு தூக்குற ஹிட் காமெடிப் படம்னா அது உங்க மகன் அன்புமணி, கூட்டணியை நியாயப்படுத்த கொடுத்த பிரஸ் மீட்தான். யூடியூப்ல டேப்பு தேயுற அளவுக்கு ஓடு ஓடுன்னு ஓடி, அவனவன் தெறிச்சு சிரிச்சு, வயிறுபுண்ணாகுற அளவுக்கு சம்பவங்கள் நடக்குது. ஆனால் நீங்க தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை காமெடி படமுன்னு பாராட்டுறது என்னா ஒரு பெருந்தன்மை!?)