கடந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ம.கவின் நிலைப்பாட்டை இறுதி செய்தவர் அன்புமணி ராமதாஸ். அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க – தே.மு.தி.க – ம.தி.மு.க அணியில் இணைய வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று சாதித்தார் அன்புமணி. இந்த கூட்டணியில் ராமதாசுக்கு துளியளவும் உடன்பாடு இல்லை. எனவே தான் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் பா.ம.க வேட்பாளருக்கு மட்டுமே ராமதாஸ் பிரச்சாரம் செய்தார்.

தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ஜ.க வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பக்கமே ராமதாஸ் செல்லவில்லை. இதற்கு காரணம் தன்னை கலந்து ஆலோசிக்காமல் கூட்டணி விவகாரத்தில் முடிவெடுத்ததுடன் சேலம் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளை அன்புமணி விட்டுக் கொடுத்ததே ஆகும். இதனை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் கூட தனித்து போட்டி என்கிற முடிவை அவசரப்பட்டு அன்புமணி எடுத்துவிட்டதாக ராமதாசுக்கு ஒரு வருத்தம் இருந்தது.

இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கூட்டணி தொடர்பாக அன்புமணி எதுவும் பேசுவதில்லை. ஆனால் தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அன்புமணியை பா.ஜ.க, அ.தி.மு.க தரப்பில் இருந்து சிலர் கூட்டணிக்கு அணுகி வருகின்றனர். அவர்களுக்கு பிடி கொடுத்து அன்புமணி பேசி வருவதாக கூறப்படுகிறது. இதனால் தான் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் பா.ம.க இடம் பெறும் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்த நிலையில் லயோலா கல்லூரியில் இந்து கடவுள்களை அவமதித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களுக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்தார். இதனால் பா.ஜ.கவுடனான கூட்டணிக்கு ராமதாஸ் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் திடீரென ராமதாஸ் கூட்டணி தொடர்பான யூகங்களை வெளியிட வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய ட்வீட் ஒன்றை ஊடகங்களுக்காக வெளியிட்டார். அத்தோடு அவர் நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. 

மாறாக கூட்டணி தொடர்பான முடிவெடுக்க எனக்கு மட்டுமே அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, கூட்டணி குறித்து நான் முடிவெடுக்கவில்லை. முடிவெடுத்த பிறகு நான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்று ராமதாஸ் அந்த ட்வீட்டில் திட்டவட்டமாக கூறியுள்ளார். அதாவது கூட்டணி விவகாரம் தொடர்பாக இனி என்னிடம் பேசுங்கள் என்று மற்ற அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போல் இந்த ட்வீட் இருக்கிறது.

எனவே தான் கூட்டணி விவகாரத்தில் ராமதாஸ் – அன்புமணி இடையே மீண்டும் பனிப்போர் வெடித்திருப்பதாக பேசப்படுகிறது.