சாத்தான்குளத்தில் தந்தை - மகன் மரணமடைந்த விவகாரத்தில் போலீஸார் மீது கொலை வழக்குபதிவு செய்து கைது செய்து வழக்கையும், குற்றவாளிகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிகளை மீறியதாக போலீஸார் கைது செய்தனர். இருவரையும் விசாரணைக்குப் பிறகு நீதிபதியிடம் ஆஜப்படுத்தி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட இருவரும் அடுத்தடுத்து மரணடைந்தனர்.  இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. விசாரணையில் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியதே அவர்கள் உயிரிழக்க காரணம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரித்துவருகிறது.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் சாவு விவகாரத்தில் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை தேவை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் காவல் நிலைய மரணங்கள் மன்னிக்க முடியாதவை. மனிதத் தன்மையற்றவை. அதற்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். 

மனித உரிமையை மீற நினைப்போரை எச்சரிக்கும் பாடமாக அமைய வேண்டும். சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இறப்புக்கு காரணமானவர்கள் மீது இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர்கள் மீது கொலை வழக்குபதிவு செய்து, கைது செய்து வழக்கையும், குற்றவாளிகளையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.