தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கடந்த 3 நாட்களாக இரவும், பகலுமாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு அரசியல் கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், ஐடி ஊழியர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் உள்பட அனைத்து மாநிலத்திலும் தொடர்ந்து ஆதரவு பெருகி வருகிறது. மேலும், சிங்கப்பூர், கனடா, மலேசிய, இந்தோனேஷியா உள்பட பல நாட்டினரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் வலுத்து வருவதால், முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று காலை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நடந்த பேச்சு வார்த்தையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வரமுடியாது என மோடி கூறியதால், ஓ.பி.எஸ். ஏமாற்றத்துடன் திரும்பினார். இதனால், தமிழக மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்நிலையில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, அவசர சட்டம் கொண்டு வராவிட்டால், வரும் 26ம் தேதி, குடியரசு தினத்தில் பாமக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி லட்சக்கணக்கான இளைஞக்ள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பனி, குளிர், வெயில் என பாராமல், இரவும் பகலுமாக அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர்களின் உணர்வுகளை புரிந்து, தமிழ் பாரம்பரியத்தை வளர்ப்பதற்காக, மத்திய அரசு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவரச சட்டம் உடனடியாக கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால், பாமக சார்பில், தடையை மீறி, வரும் 26ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சுவிரட்டு நடத்தப்படும்.
எனவே, மாணவர்களின் போராட்டத்தை மதித்து மத்திய அரசு, அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி, தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
