அன்புமணிக்கு அதிமுக சார்பில் ராஜ்யசபா எம்பி பதவி வழங்கக்கூடாது என அதிமுகவை சேர்ந்தவரும் பிரபல நடிகருமான ஆனந்த ராஜ் வலியுறுத்தி இருக்கிறார்.  

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்துமே பலவீனமான கட்சிகள். விஜயகாந்த் கட்சி எந்தக் கட்சியைவிட பலவீனமானது, பாமக கடைசி நேரத்தில் வந்தது. பாஜக தமிழகத்தில் எப்படி உள்ளது என்பதையெல்லாம் அதிமுக ஆராய வேண்டும். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தம்பிதுரை அதிமுகவில் தோற்கிறார் என்றால் யோசிக்க வேண்டும்.

 

பாமக 7 தொகுதிகளில் தோல்வியடைந்தது. தேர்தலுக்கு முன்பே அக்கட்சிக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி என பேசப்பட்டது. இப்போது பாமகவுக்கு அது கிடைப்பதை எப்படி பார்க்கிறீர்கள். இதனை தேர்தலுக்கு முன்பே சொன்னேன். இந்த அதிமுக வாக்கு, அதிமுகவுக்காக மக்கள் தந்த வாக்குகள். இரட்டை இலைக்கு கிடைத்த வாக்குகள். இதனை இன்னொரு கட்சிக்கு தாரை வார்க்கக்கூடாது. நம்முடைய வாக்கை வேறொரு கட்சிக்கு தாரை வார்த்து தருவதற்கான உரிமை நமக்கு இருக்கிறதா?

 

அதிமுக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் என்னுடன் பேசினார்கள். அன்புமணிக்கோ, பாமகவில் வேறு யாருக்கோ ராஜ்ய சபா உறுப்பினர் பதவி தருகிறேன் என்று சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும். இது நம்முடைய உரிமை. கட்சிக்காக உழைத்தவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வேறு யாருக்கும் கொடுக்காதீர்கள் என்பது எனது அன்பு வேண்டுகோள்’’ என அவர் தெரிவித்தார்.