விளம்பரம் கொடுத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்த ஆட்சியர்..! அவரிடம் இருந்தே பணத்தை வசூல் செய்திடுக- அன்புமணி
என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
என்எல்சிக்கு ஆதரவாக விளம்பரம்
நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களிலருந்து , ஏழை,எளிய மக்களின் நிலங்களை அபகரிப்பதாக அப்பகுதி மக்கள் மற்றும் அரசியில் கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் என்எல்சி நிர்வாகம் சார்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், என்எல்சிக்காக கையகப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது நாட்டில் அதிகப்படியான இழப்பீடு கொடுக்கும் முதல் பொதுத்துறை நிறுவனம் என்எல்சி மட்டுமே என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிப்பிற்கு அரசியில் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மக்கள் வரிப்பணம் வீண்
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நிலப்பறிப்பு சர்ச்சை தொடர்பான என்.எல்.சி நிறுவனத்தின் விளக்கத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, மக்கள் தொடர்பு அலுவலரே நாளிதழ் விளம்பரமாக (RO No.56/IPRO/Cuddalore/2023) வெளியிட்டிருக்கிறார். என்.எல்.சியின் விளம்பரத்தை அரசே வெளியிட்டது தவறு; கண்டிக்கத்தக்கது! என்.எல்.சியின் விளம்பரத்தில் உண்மை இல்லை. என்.எல்.சியின் போக்கில் மாற்றமும் இல்லை. மக்களை மதிக்காத என்.எல்.சிக்கு எதிராக, மக்களுக்கு ஆதரவாகத் தான் மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும். ஆனால், மக்கள்விரோத நிறுவனத்திற்கு மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் தருவது நியாயமற்றது! என்.எல்.சியின் விளக்கத்தை அது தான் விளம்பரமாக அளித்திருக்க வேண்டும். அந்த நிறுவனத்திற்கென மக்கள்தொடர்பு பிரிவு இருக்கும் நிலையில்,
ஆட்சியரிடம் பணம் வசூல்
மாவட்ட மக்கள்தொடர்பு அலுவலர் மூலம் மக்கள்வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிடச் செய்ய கடலூர் ஆட்சியர் என்.எல்.சியின் விளம்பர முகவர் அல்ல! தில்லி அரசு விதிகளை மீறி விளம்பரங்களை வெளியிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததற்காக அம்மாநிலத்தின் ஆளும் கட்சியிடமிருந்து ரூ.163.62 கோடியை வசூலிக்க தில்லி அரசின் குழு ஆணையிட்டது. என்.எல்.சி விவகாரத்திலும் அது தான் நடந்துள்ளது; தில்லி நடவடிக்கை கடலூருக்கும் பொருந்தும். என்.எல்.சிக்காக மக்கள் வரிப்பணத்தில் விளம்பரம் வெளியிட கடலூர் ஆட்சியர் ஆணையிட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். விளம்பரத்திற்காக செலவழிக்கப்பட்ட மக்களின் வரிப்பணத்தை கடலூர் மாவட்ட ஆட்சியரிடமிருந்து வசூலிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள்