மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவிற்கு மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா குருவின் சொந்த ஊரான காடுவெட்டியில் நேற்று பிரமாண்டமாக  நடைபெற்றது.  மணிமண்டபம் கட்டுவதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அடிக்கல் நாட்டினார். இதில் குருவின் குடும்பத்திலிருந்து அவரது மனைவி சொர்ணலதா மட்டுமே கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, இந்த நிகழ்வில் குருவின் தயாரும், பிள்ளைகளும் இருந்திருந்திருந்தால் தனது மனம் திருப்திப்பட்டிருக்கும் என்று குறிப்பிட்ட அவர், “குருவின் மகள் திருமணத்தை இந்த சமுதாயமே கொண்டாடியிருக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்துகொண்டிருப்பது கோபமாக இல்லை, வருத்தமாக இருக்கிறது. கனலரசன் ஒரு குழந்தை, அவனுக்கு ஒன்றும் தெரியாது. 

பிற்காலத்தில் தெரிந்துகொண்டு எங்களிடம் வருவான். அவனை நான் அழைத்துப் பேசினேன், அக்காவை கோடீஸ்வர மாப்பிள்ளையாகப் பார்த்து திருமணம் செய்துவைக்கிறேன் என்று கனலிடம் கூறினேன். 

குருவின் ஆசை, எங்களின் ஆசை, கனலரசன் மருத்துவர் ஆக வேண்டும் என்பது. நான் அவனை படிக்கச் சொன்னேன். மருத்துவர் ஆன பிறகு அரசியலுக்கு வருவதாக இருந்தால் வா? தொழில் தொடங்குவது என்றால் தொடங்கு என்று கூறினேன். உனக்கு என்ன வேண்டுமோ செய்துகொடுக்கிறேன் என்றும் கூறினேன். தான் படிப்பதாக அவன் கூறினான். ஆனால், அவன் படிப்பது போல எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாக ஒருநாள் புரிந்துகொண்டு வருவான்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.