டெல்டா மாவட்டங்களில் கனமழை..! நீரில் மூழ்கிய நெற்பயிர்.! இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுக்கும் அன்புமணி
காவிரி பாசன மாவட்டங்களில் கனமழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கன மழை-பயிர்கள் பாதிப்பு
வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சை என டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்து பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியிருக்கின்றன! வயல்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் நெற்பயிர்களை எந்திரங்களைக் கொண்டு அறுவடை செய்ய முடியவில்லை.
இழப்பீடு வழங்க கோரிக்கை
விளைந்த நெல் மணிகள் உதிர்ந்து கொட்டி விடும் என்பதால், உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். அதனால் உழவர்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனர்!மற்றொருபுறம், அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதால், அதன் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது.
அதனால், அவற்றை கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது!தொடர்மழையால் உழவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க, சேதமடைந்த நெற்பயிர்களை கணக்கெடுத்து அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழையில் நனைந்த நெல் மூட்டைகளை, ஈரப்பத விதிகளை தளர்த்தி கொள்முதல் செய்யும்படி தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்