பள்ளிக் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து, விவாதம் நடத்த தயாரா என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு, நாள், தேதி, நேரத்தை அறிவித்துள்ளார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பள்ளிக் கல்வி துறை செயல்பாடுகள் குறித்து தம்முடன் விவாதம் நடத்த தயாரா என்று அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அறிவித்திருந்தேன்.

விவாதத்துக்கான நாளையும், இடத்தையும் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அமைச்சர், அதை விடுத்து விவாதம் நடத்துவதற்கான ஏற்பாடுகளையும், நாங்களே செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

எனவே, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட நிலையில், அதற்கான இடத்தையும், தேதியையும் முடிவு செய்ய வேண்டியது அமைச்சர்தான். 

ஆனால், அதையும் நானே முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியிருப்பது பெருந்தன்மையா? பயமா? என்று தெரியவில்லை என்றும் அன்புமணி கூறியுள்ளார்

தமிழகத்தில் பள்ளிகள் தரமான கல்வி வழங்கப்பட்டு வந்த நிலையில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளை அனுமதித்து கல்வியைக் கடைச்சரக்காகவும் தரமற்றதாகவும் மாமற்றியது அதிமுகதான் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தெரிவிக்க இந்த விவாதம் சிறப்பாக அமையும் என்றும், இவ்விவாதத்தை ஆக்கப்பூர்வமான வகையில் நடத்த வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என்றும் அன்புமணி கூறியுள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டவாறு, வரும் 12 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை விவாதம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவையில் இந்த விவாதம் நடைபெறும்.

இந்த விவாதத்தில் அமைச்சர் செங்கேட்டையன் பங்கேற்க வேண்டும் என்று அழைக்கிறேன் என்றும், இவ்விவாத நிகழ்ச்சியை மக்கள் பார்க்கும் வகையில், தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்புவதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக அறிவித்துள்ளார்.