வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல், மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் திட்டமிட்டுவருவதாக தகவல்கள் கசிகின்றன,


அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7+1 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. பாமக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் தருமபுரி, கள்ளக்குறிச்சி, ஆரணி, சிதம்பரம், கடலூர் உள்ளிட்ட தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது தருமபுரி தொகுதி எம்.பி.யாக உள்ள அன்புமணி ராமதாஸ் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட மாட்டார் என மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்புமணி போட்டியிட உத்தேசித்துள்ள தருமபுரி தொகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணியை நிறுத்த பாமக முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிருஷ்ணகிரி  மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட ஜி.கே. மணி, சுமார் இரண்டே கால் லட்சம் வாக்குகள் பெற்றார். இந்த முறையும் அவர் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட விரும்பினார். ஆனால். தருமபுரி தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட இருப்பதால், கிருஷ்ணகிரி தொகுதியை அதிமுக எடுத்துக்கொள்ளும் என்று பாமகவிடம் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
கிருஷ்ணகிரி தொகுதி கிடைக்காதபட்சத்தில், ஜி.கே.மணிக்கு தருமபுரி தொகுதியை விட்டுதர அன்புமணி முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குப் பதிலாக அதிமுக வழங்க உத்தேசித்துள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்று நாடாளுமன்றத்துக்கு செல்ல அன்புமணி திட்டமிட்டிருப்பதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2004-ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகி மத்திய அமைச்சராகவும் அன்புமணி பதவிவகித்தார். இந்த முறையும் அதே பாணியில் அவர் மாநிலங்களவை உறுப்பினராகத் திட்டமிட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.