Asianet News TamilAsianet News Tamil

சபரிமலையிலிருந்து வந்ததும் சாமியாடும் அன்புமணி... வசமா சிக்கியது யார் தெரியுமா? என்ன மேட்டரு?

அமைச்சரும், அவரது குடும்பத்தினரும் தருமபுரி மாவட்டத்தின் குறுநில மன்னர்களாக மாறி ஆட்சி நடத்துவது குறித்தும், அரசுத்துறை ஒப்பந்தங்களை மிரட்டிப் பறிப்பது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன. 

Anbumani Action against Anbazhagan
Author
Chennai, First Published Dec 3, 2018, 10:12 AM IST

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் அரசுத் துறை கட்டடங்களைக் கட்டுதல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், நீர்நிலைகளைத் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தையும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அவரது குடும்பத்தினர் மற்றும் பினாமிகள் பெயரில் கைப்பற்றி, அரசு நிதியைக் கொள்ளையடித்து வருவது குறித்தும் ஏற்கனவே பலமுறை புள்ளி விவரங்களுடன் குற்றம்சாட்டியிருக்கிறேன். அவை அனைத்தையும் விஞ்சுவதைப் போல இப்போது அமைச்சர்மீது புதிய குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.2 கோடி செலவில் சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகம் கட்ட தீர்மானிக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறையின் மருத்துவப் பணிகள் பிரிவுக்கான கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகத்தில் கோரப்பட்டன. மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்புள்ள சிவில் பணிகளை ரூ.1.58 கோடியில் நிறைவேற்ற தர்மபுரியைச் சேர்ந்த கிருட்டிணன் என்ற ஒப்பந்தக்காரர் முன்வந்திருந்ததால் அவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. அதன்பின் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேளாண் பொறியியல் சார்ந்த பணிக்கான ஒப்பந்தப்புள்ளிகள் சென்னையில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில் கோரப்பட்டன. அதற்காக தர்மபுரி ஒப்பந்ததாரர் கிருட்டிணன், அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் ஏ.செந்தில்குமார், அமைச்சருக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகி ஒருவர் ஆகியோர் ஒப்பந்தப்புள்ளிகளைத் தாக்கல் செய்திருந்தனர். கிருட்டிணன் போட்டியிலிருந்து விலகிவிட்டால் அதிக தொகைக்கு ஒப்பந்தத்தை எடுத்து லாபம் பார்க்கலாம் என அமைச்சரின் மைத்துனர் திட்டமிட்டதாகவும், அதற்காக ஒப்பந்தப்புள்ளியைத் திரும்பப் பெறும்படி தன்னை மிரட்டியதாக ஒப்பந்ததாரர் கிருட்டிணனே குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்குப் பிறகும் கிருட்டிணன் பின்வாங்காததால் இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்ட அமைச்சர் அன்பழகன், மாவட்டத்திலுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அழுத்தம் கொடுத்து, கிருட்டிணன் ஏற்கனவே செய்து வந்த சுகாதாரத் துறை இணை இயக்குநர் அலுவலகக் கட்டுமானப் பணிகளை பாதியில் நிறுத்தி வைத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பழகனின் மைத்துனர் பங்கேற்கும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறையில் மற்ற எவரும் பங்கேற்கக் கூடாது என மிரட்டுவதும், அதை ஏற்க மறுத்தால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் விதிகளின்படி ஒப்பந்தம் பெற்று மேற்கொண்டு வரும் மற்ற கட்டுமானப் பணிகளை மாவட்ட நிர்வாகத்திலுள்ள அதிகாரிகளின் துணையுடன் தடுப்பதும் எந்த வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, “இதற்கெல்லாம் மேலாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து அரசுத் துறை ஒப்பந்தங்களும் அமைச்சரின் குடும்பம் மற்றும் பினாமிகளுக்குத் தான் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் மைத்துனர் செந்தில்குமார், தனி உதவியாளர் பொன்வேலு ஆகியோர்தான் அனைத்துப் பணிகளையும் பினாமி பெயர்களில் எடுத்துச் செய்கின்றனர்.

பொன்வேலுவின் மனைவியை நிர்வாக இயக்குநராகக் கொண்டு சஞ்சனா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு, அதற்கு ஒப்பந்தப் பணிகள் வாரி வழங்கப்படுகின்றன. அவர்களால் செய்ய முடியாத பணிகள் மட்டும், அவற்றின் மொத்த மதிப்பில் 5 சதவிகிதம் கமிஷன் பெறப்பட்டு மற்றவர்களுக்கு விற்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட வேண்டும் என்றும், மாநில அரசு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது என்பதால், தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஒப்பந்த ஊழல்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்றும் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios