திருச்சி திமுகவுக்கு ராஜா..! நீண்ட நாள் லட்சியத்தை அடைந்த மகிழ்ச்சியில் அன்பில் மகேஷ்..!
திமுக தலைவர் ஸ்டாலினின் இன்னொரு மகன் போல அவரது வீட்டிலேயே வளர்ந்தவர் அன்பில் மகேஷ். மு.க.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகன் தான் இந்த அன்பில் மகேஷ். பொய்யா மொழியின் மறைவிற்கு பிறகு சென்னை வந்த மகேஷ், ஸ்டாலின் வீட்டிலேயே தங்கிவிட்டார். அப்போது முதலே உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அன்பில் மகேஷ் இருந்து வருகிறார்.
திருச்சி மாவட்ட திமுக செயலாளர் ஆக வேண்டும் என்கிற அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் லட்சியம் கிட்டத்தட்ட நிறைவேறியுள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலினின் இன்னொரு மகன் போல அவரது வீட்டிலேயே வளர்ந்தவர் அன்பில் மகேஷ். மு.க.ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பரான அன்பில் பொய்யாமொழியின் மகன் தான் இந்த அன்பில் மகேஷ். பொய்யா மொழியின் மறைவிற்கு பிறகு சென்னை வந்த மகேஷ், ஸ்டாலின் வீட்டிலேயே தங்கிவிட்டார். அப்போது முதலே உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான நண்பராகவும் அன்பில் மகேஷ் இருந்து வருகிறார்.
முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலினின் வலது கரமாக மகேஷ் செயல்பட்டு வந்தார். ஸ்டாலின் எங்கு சென்றாலும் அவருடன் செல்பவர் மகேஷ். ஸ்டாலினின் தனிப்பட்ட உதவியாளர் போல செயல்பட்டு வந்தாலும் எங்கு சென்றாலும் ஸ்டாலினுக்கு கிடைக்கும் அதே மரியாதை அன்பில் மகேஷ்க்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக ஸ்டாலினுடன் இருந்தாலும் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார் மகேஷ்.
ஸ்டாலின் எவ்வளவோ கூறியும் 2011 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மகேஷ் மறுத்துவிட்டார். மேலும் 2011 தேர்தலில் கொளத்தூரில் ஸ்டாலின் போட்டியிட அவரது ஆயிரம் விளக்கு தொகுதியில் அன்பில் மகேஷைத்தான் களம் இறக்க திட்டமிட்டனர். ஆனால் கொளத்தூரில் ஸ்டாலினுக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று கூறி ஆயிரம் விளக்கில் போட்டியிட அவர் மறுத்துவிட்டார். ஆனால் 2016 சட்டமன்ற தேர்தலில் திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டிடு எம்எல்ஏ ஆனார் அன்பில் மகேஷ்.
2016 சட்டமன்ற தேர்தலில் அன்பில் மகேஷை கண்டிப்பாக போட்டியிட வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டார். அப்படி என்றால் திருச்சியில் போட்டியிடுவதாக கூறினார் அன்பில். ஆனால் திருச்சி மாநகருக்குள் அன்பில் வராமல் பார்த்துக் கொண்டார் கே.என்.நேரு. இதனால் திருச்சி புறநகரான திருவெறும்பூரில் போட்டியிட்டு வென்றார் அன்பில். இந்த அளவிற்கு அவருக்கு திருச்சி மீது தீராத காதல்.
தனது சொந்த ஊர் திருச்சியில் இருப்பதாலும் தனது தந்தை திருச்சி மாவட்டத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதாலும் அங்கு அரசியல் செய்ய வேண்டும் என்பது தான் அன்பிலின் எண்ணம். அதனை எம்எல்ஏ ஆகி தீர்த்துக் கொண்டாலும் கே.என் நேருவை மீறி அவரால் அங்கு அரசியல் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தான் நேருவுக்கு திமுக தலைமை நிலையச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நேருவிடம் இருக்கும் திமுக மாவட்டச் செயலாளர் பதவி விரைவில் அன்பில் மகேஷ்சிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவட்டச் செயலாளர்களும் நேருவின் தீவிர ஆதரவாளர்கள். இதனால் அந்த இரண்டு மாவட்டங்களையும் இணைத்து ஒரே மாவட்டமாக்கி அன்பிலை செயலாளர் ஆக்குவதா அல்லது அவர்களை நீக்கிவிட்டு அன்பில் கூறுபவர்களை மாவட்டச் செயலாளர் ஆக்குவதா என்று அறிவாலயத்தில் டிஸ்கசன் போய்க் கொண்டிருக்கிறது. தனது நீண்ட நாள் லட்சியம் நிறைவேறப்போகும் எண்ணத்தில் அன்பிலும் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்.