திருச்சி உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய எம்.எல்.ஏ அன்பில் மகேஷிக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 30 வருடங்களுக்குப் பிறகு தன் தாத்தா அன்பில் தர்மலிங்கம் வகித்த மாவட்டச் செயலாளர் பொறுப்பை தற்போது அவர் கைப்பற்றியுள்ளார். 

திருச்சி திமுக மாவட்டச் செயலாளராகக் கடந்த 28 வருடங்களாக இருந்தவர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு, தி.மு.க-வின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க கடுமையான போட்டி நிலவியது. இதனிடையே, மாவட்ட செயலாளர் பதவியை தனது ஆதரவாளர்களுக்கு வழங்க கே.என்.நேரு தீவிரம் காட்டி வந்தார். அதேநேரம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் தனக்குள்ள நெருக்கத்தின் மூலம் அன்பில் மகேஷும் மாவட்ட செயலாளர் பதவிக்கு ரகசியமாக காய் நகர்த்தி வந்தார். 

இந்நிலையில், திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள் திருச்சி வடக்கு, திருச்சி மத்திய, திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- திருச்சி தெற்கு மாவட்டக் கழக செயலாளர் கே.என்.நேரு தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், திருச்சி வடக்கு - திருச்சி தெற்கு ஆகிய மாவட்டங்கள், திருச்சி வடக்கு - திருச்சி மத்திய - திருச்சி தெற்கு என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. முசிறி, துறையூர், மண்ணச்சநல்லூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி வடக்கு மாவடடக் கழகச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மேற்கு, திருவரங்கம், இலால்குடி ஆகிய ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி மத்திய மாவட்டக் கழகப் பொறுப்பாளராக வைரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.


 
திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய திருச்சி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக அன்பில் மகேஷ்பொய்யாமொழி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.