அதிமுகவில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், மொத்தத்தில் அதிமுகவில் உள்ள 3 அணியுமே 420தான் என்றும் திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிசாமி அணிக்கும், டி.டி.வி.தினகரன் அணிக்கும் இடையேயான வார்த்தைப் போர் உச்சத்தை அடைந்துள்ளது. நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணைத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தற்போது அதற்கு எதிராக செயல்படுவதால், அவரை 420 என குறிப்பிட்டார்.

அதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,தினகரன் '420' என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

பீனர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், மொத்தத்தில் அதிமுகவில் உள்ள 3 அணியுமே 420தான் என்றும் தெரிவித்தார். 

அதிமுகவில் நம்பர்-1 420 யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுவதாகவும், இந்த ஆட்சி மீது தேவைப்பட்டால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று தான் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். எனவே உடனே கொண்டு வருவதாக அர்த்தம் இல்லை என தெரிவித்தார்.