தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வான பழனிவேல் தியாஜராஜனிடம் மட்டும் அ.தி.மு.க.வினர் ரொம்பவே மிரட்சி காட்டுவார்கள். காரணம், மனிதர் மெத்தப் படித்தவர், பேச்சில் பீட்டர்த்தனம் தெறிக்கும், வழக்கமான அரசியல்வாதியாக ‘அவர்களே! இவர்களே!’ போடாமல், நறுக்குத் தெறித்தார் போல சப்ஜெக்டை மட்டும் பேசுவார். அதுவும் புள்ளி விபரங்களோடு வெளுத்தெடுப்பார்.

இதனால்தான் இவரிடம் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, சொந்தக்கட்சியினரும் வைத்துக் கொள்வதில்லை. ஒயிட் காலர் அரசியல்வாதியாக ஒரு ஓரமாய்  ஒதுக்கி வைத்திருந்தனர். தியாகராஜனும் துவக்கத்தில் ‘அப்பா தொல்லை விட்டுச்சு’ என்றுதான் இருந்தார். ஆனால், ஜனரஞ்சக அரசியல் வட்டாரத்தில் பழக துவங்கிய பின் இவருக்கும் விளம்பரங்களின் மீது ஆசை வந்துவிட்டது. விளைவு, பிறவி அரசியல்வாதிகளே தோற்குமளவுக்கு புதுசுபுதுசாய் தன்னைத்தானே வைராலாக்கிக் கொள்கிறார். 

அந்த வகையில் சமீபத்தில் வெளிநாடுகளில் இருந்து தன்னைப் பார்க்க மதுரைக்கு வந்திருந்த தனது நண்பர்களை டின்னருக்கு அழைத்துச் சென்றார். மதுரையிலுள்ள ஏதோ ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு அல்ல. தனது மத்திய தொகுதியில் உள்ள ‘திராவிடர் உணவகம்’ எனும் சிறிய ரக புரோட்டா கடைக்குத்தான் அழைத்துச் சென்றார். 
தயங்கியபடியே உட்கார்ந்த நண்பர்கள், புரோட்டாவின் சுவையில் சொக்கிவிட்டனர். மொத்தம் இருபது, இருப்பத்தைந்து புரோட்டாக்களை பழனிவேல்  தியாகராஜன் உள்ளிட்ட நண்பர் படை சாப்பிட்டது. கடை ஓனர் பில்லை வழங்க மறுக்க, இவரோ  வர்புறுத்தி பணத்தை வழங்கிவிட்டு வந்திருக்கிறார். 

இப்படி ஒரு சிறிய ஹோட்டலுக்கு நண்பர்களை அழைத்து சென்றதையும், எளிமையாக உட்கார்ந்து புரோட்டா சாப்பிட்டதையும், வர்புறுத்தி அவர் பணம் கொடுத்ததையும் இரண்டு நபர்கள் போட்டோ எடுத்து, விவரிப்புகளோடு வாட்ஸ் அப்பில் வைரலாக்கிவிட்டனர். தி.மு.க.வின் பல எம்.எல்.ஏ.க்கள் வழியே ஸ்டாலினின் கவனம் வரை சென்றுவிட்டது. அவரது பர்ஷனல் செக்யூரிட்டி அதிகாரி ஒருவர் பழனிவேலுக்கு போன் போட்டு ‘சார் என்ன எங்களுக்கெல்லாம் புரோட்டா கிடையாதா?’ என்று கேட்க, அதற்கு உண்டு! உண்டு! என்று சிரித்தாராம் தியாகராஜன். 

இந்த பரோட்டா நியூஸில், காரசாரமான ஹாட் ஹைலைட் என்னவென்றால், அதையெல்லாம் போட்டோ எடுக்கச் சொல்லி, விவபரங்களோடு சேர்த்து வாட்ஸ் அப்பில் போடச்சொன்னது, அதுவும் நிருபர்கள் இருக்கும் குரூப்புகளாய் பார்த்து பகிரச் சொன்னதே பழனிவேல்தானாம். மற்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தெறித்துக் கிடக்கிறார்கள் இவரின் ஐ.டி.விங் மூளையை பார்த்து. புரோட்டாவுக்கு புரோட்டாவுமாச்சு, சல்லிசு காசுல மத்திய தொகுதி மக்கள் மனசுல வைரலும் ஆயாச்சு.  

அப்ப அந்த புரோட்டாவை சுட்டதே நீங்கதானா பாஸு?