AIADMK : புரட்சி பயணம் ஆரம்பம்.! ஆட்டத்தை ஆரம்பித்த சசிகலா..நம்ம லிஸ்ட்லயே இல்லையே ?
Sasikala : ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு, இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளித்து உள்ளார்.
இபிஎஸ் - ஓபிஎஸ்
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த விவாதம் எழுந்ததிலிருந்து தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒற்றைத் தலைமை கருத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, மீண்டும் ஜூலை 11ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும். அப்போது ஒற்றைத் தலைமை தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முடிவு எடுக்கப்பட்டது.
ஒற்றை தலைமை
அதனையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டத்திலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வெளிநடப்பு செய்தனர். அதனத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தனித்தனியாக முகாமிட்டனர். இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு, இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து பொதுக்குழு செயற்குழுவில் நடந்தவை குறித்து புகார் அளித்து உள்ளார்.
அந்த புகாரில், அதிமுக தலைமையை சட்ட விரோதமாக எடப்பாடி பழனிசாமி கைப்பற்ற முயற்சிப்பதாக குறிப்பிட்டு ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். இந்த நிலையில்தான், அதிமுகவில் மோதல் நிலவி வருவதற்கு இடையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் புரட்சிப்பயணம் என்ற தலைப்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!
சசிகலா - புரட்சிப்பயணம்
அந்த அறிக்கையில், ‘தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார். சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார்.
பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுட்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் R.K.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.
அதிமுக
புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலை தங்களது முன் மாதிரியாக ஏற்றுக்கொண்டு தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து சசிகலாவின் இந்த அறிக்கை அதிமுக வட்டாரங்களில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Agnipath Recruitment 2022: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!