காங்கிரஸ் கட்சியில் கவுன்சிலராக அரசியல் பயணத்தைத் தொடங்கிய வெற்றிவேல், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு வழங்கினார். ஆனால், 2014-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனால் முதல்வர் பதவி பறிபோனது. பின்னர் 2015-ம் ஆண்டில் கர்நாடக உயர் நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து ஜெயலலிதாவை விடுவித்தது.


இதனையடுத்து ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாக வசதியாக சென்னையில் போட்டியிட விரும்பினார் ஜெயலலிதார். அதற்காக அப்போது ஆர்.கே. நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே. நகர் தொகுதியிலேயே போட்டியிட்டார். இதனால், வெற்றிவேலுக்கு பெரம்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கினார். அந்த வெற்றிவேல் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், ஜெயலலிதா மறைவையடுத்து பிரிந்திருந்த ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு தினகரன் அணியில் வெற்றிவேல் இருந்தார். தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் வெற்றிவேலும் ஒருவராக இருந்தார்.
இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகியும் முழுமையாகப் பதவி வகிக்க முடியாமல் அரசியல் சூழல் காரணமாக பதவியை இழந்தவர் வெற்றிவேல். தனக்கு நம்பிக்கைக்குரியவராக இருந்ததால் டிடிவி தினகரன் அமமுகவில் அவருக்குப் பொருளாளர் பதவி வழங்கினார். ஆனால், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தனது உயிரையும் இன்று வெற்றிவேல் இழந்துவிட்டார்.