அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்த நிலையில் டி.டி.வி.தினகரனின் ஆணவப்போக்கால் கூடாரம் மாறப்போவதாக அக்கட்சியின் தலைமைக் கழகப் பேச்சாளர் அக்னீஸ்வரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து வந்த அவர், அவரின் போக்குகள் சரிப்பட்டு வராததால் கட்சியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்த்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’டி.டி.வி.தினகரன் தமிழகத்தின் மோடி.  அவரஒப்போலவே பேசுவார். ஆனால், எந்தத் திட்டமும் இருக்காது. மோடியை போல பேசுவார் ஆனால் மக்களை கண்ணீர் பட வைப்பார். ஒரு ஆர்.கே.நகர் மாதிரி 234 தொகுதிகளும் மாறிவிடுமா? அல்லது நடந்திடுமா? நடக்க விடுவார்களா? 

வெற்றிவேலும், தங்க.தமிழ்செல்வனும் ஒன்றா..? காங்கிரஸில் இருந்து வந்தவர் வெற்றிவேல். ஆனால், தங்க தங்க.தமிழ்ச்செல்வன் அவரது முன்னோர்கள் காலத்தில் இருந்தே அதிமுகவில் இருக்கிறார். ஆனால், தங்க தமிழ்செல்வன் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டப்படுகிறார். பலரும் ஏன் இவரை நம்பி இங்கே வந்தோம் என்கிற கவலையில் இருக்கிறார்கள். ஏதோ வந்துவிட்டோம், பதவியை இழந்துவிட்டோம் என விதியை நினைத்து நொந்து கிடக்கிறார்கள். எனக்கு முன் சிவசங்கரி கட்சியை விட்டு வெளியேறினார். அடுத்து செந்தில் பாலாஜி வெளியேறினார். அதுக்கு முன்னால் நாஞ்சில் சம்பத் கிளம்பினார். 

ரோட்டோரக் கடையில் சாப்பிட்டுவிட்டு தினகரனை விடுதலை செய்ய வேண்டும் என கூக்குரலிட்டவர் நாஞ்சில் சம்பத். அவருக்கு என்ன மரியாதை கிடைத்தது. தினகரனிடம் மெத்தனப்போக்கு அதிகம் இருக்கிறது. தன்னை ஒரு முதலமைச்சராகவே அவர் கருதி வருகிறார். இவரது போக்கு வருங்கால சமுதாயத்திற்கு நல்லதல்ல. உண்மையான தொண்டர்களை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால் 7 கோடி தமிழர்களை எப்படி தக்க வைத்துக் கொள்வார். தினகரனின் போக்கு ஆணவப்போக்கு. அவசரப்போக்கு, அதிகாரப்போக்கு.

அம்மா இருக்கும்போது 132 ஆக இருந்த எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கை தினகரன் உள்ளே நுழைந்த பிறகு, 18 ஆனது. இந்தப் பதினெட்டும் தற்போது ஒரு எம்.எல்.ஏ-வாக ஆகிவிட்டது. அந்தப் பதினெட்டுபேரும் தினகரனின் மாயவலையில் விழுந்துவிட்டதாகப் புலம்புகிறார்கள். அவர்கள் இன்னும் சசிகலா மீதான விசுவாசத்துக்காக இங்க இருக்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களை மட்டுமே கட்சியில் வைத்துக் கொள்ளப்பார்க்கிறார். டி.டி.வியின் செயல்பாடுகளால் அமமுக அழிவை நோக்கி செல்கிறது’’ என அவர் தெரிவித்தார்

இந்நிலையில் அக்னீஸ்வரன் சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஆரம்பித்துள்ள அண்ணா திராவிடர் கழகத்தில் தன்னை அடுத்த மாதம் நடைபெற உள்ள விழாவில் இணைத்துக்கொள்ள உள்ளார்.