ரஜினியுடன் கூட்டணி வைக்க அவர் வீட்டு வாசலில் நாங்கள் காத்துகொண்டிருக்கவில்லை என்று அமமுக செய்திதொடர்பாளாரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வெற்றிவெல் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரனுடன் கூட்டணி வைத்தால் அவப்பெயர் ஏற்படும் என ரஜினி கருதுவதாக தமிழருவி மணியன் பேட்டி அளித்ததாக தகவல் வெளியானது. தமிழருவி மணியனின் இந்தப் பேட்டி அமமுகவினரை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழருவி மணியன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமமுக செய்திதொடர்பாளர் வெற்றிவேல் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில், “ரஜினியின் அரசியல் குறித்து பேச தமிழருவி மணியனுக்கு என்ன அங்கீகாரம் உள்ளது? ரஜினியின் செய்தி தொடர்பாளரா இவர்? தான் அமைத்த கூட்டணிதான் அமோக வெற்றி பெறுகிறது என்று மொட்டையாக எதையும் தமிழருவி பேசக் கூடாது. 
முதலில் ரஜினி கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக அவர்தான் வாயைத் திறக்க வேண்டும். தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவரா அல்லது காந்திக்கு பேரனா? தமிழருவி மணியன் நல்லவர்தான். அதற்காக அவர் எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது. ரஜினி கட்சி ஆரம்பித்தால், டிடிவி தினகரனுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்று இவர் எப்படி சொல்ல முடியும்? ரஜினியுடன் கூட்டணி வைக்க அவர் வீட்டு வாசலில் நாங்கள் காத்துகொண்டிருக்கவில்லை. கூட்டணி குறித்து ரஜினி முடிவு செய்ய வேண்டும் அல்லது அமமுக முடிவு செய்யவேண்டும். இடைத்தரகர் தமிழருவி மணியன் இதையெல்லாம் பேசக் கூடாது. அதிகப் பிரசங்கித்தனமாக எதையும் பண்ண கூடாது” என்று வெற்றிவேல் தெரிவித்தார்.