சேலம் மாவட்டத்தில் கன்னங்குறிச்சி காவல்துறையினர் நேற்று சின்னத்திருப்பதி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இருசக்கர மற்றும் நான்கு சக்கர வானங்களில் வருபவர்களிடம் ஓட்டுநர் உரிமம், வண்டியின் ஆர்.சி புக் போன்றவைகளை சரிபார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அதையும் நிறுத்தி காவலர்கள் ஆவணங்களை சரிபார்த்துள்ளனர்.

அப்போது அதை ஓட்டிவந்தவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்திருக்கிறார். இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் வாகனத்தை சோதனை செய்துள்ளனர். அதில் காவல்துறையினர் பயன்படுத்தும் தொப்பிகள் நான்கும், இரண்டு லத்தியும் இருந்திருக்கிறது. அதுகுறித்து கேட்டபோது அந்த வாலிபர் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ஜெகஸ்தீஸ்வரன் என்றும், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்றும் தெரிவித்திருக்கிறார்.

எனினும் சந்தேகம் கொண்ட காவலர்கள் தீவிர விசாரணை செய்ததில் அந்த நபர் காவலர் என்று ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். காவல்துறையின் உடையில் சென்று அந்த பகுதியினரிடையே வழிப்பறியில் ஈடுபட்டிருந்ததும் விசாரணையில் வெளிவந்தது. மேலும் அவர் டி.டி.வி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநகர இளைஞரணி செயலராக இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார் மற்றும் காவல்துறையின் உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படிருக்கிறது.