ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி தமிழகத்தில்  உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. 

இந்தத் தேர்தலில் போட்டியிட அதிமுக, திமுக கூட்டணிகள் அசுர வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் தினகரனின் அமமுக கூட்டணி சிறிய அளவில் கூட வேகம் காட்டவில்லை.

அனைத்து தொகுதிகளிலும்  தனித்து போட்டி என்று தினகரன் அறிவித்தார். ஆனால் அதற்கான எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை. மேலும் வேட்பாளர் விருப்ப மனு, நேர் காணல் என்று எந்த நடவடிக்கையும் அமமுக சார்பில் நடைபெறவில்லை.

மேலும் அமமுகவின் குக்கர் சின்னம் கிடைக்காமல் இருக்க தேர்தல் ஆணையம் சதி செய்வதாக அவரது தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்த வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகாததால் மார்ச் 25ஆம் தேதிக்கு வழக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

அப்படியே குக்கர் சின்னம் கிடைத்தாலும் அதற்கு அடுத்த நாள் மார்ச் 26ஆம் தேதிதான் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி. இது போன்ற பல நெருக்கடிகளுக்கு அமமுக ஆளாகியிருப்பது அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்டுகிறது.

இந்நிலையில் தான் முக்கிய பாஜக நிர்வாகி ஒருவர் பெங்களூரு  சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து அமமுக இந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளில் மட்டும் அமமுக போட்டியிடலாம் என அவர் அழுத்தம் கொடுத்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை  சந்தித்த போது தினகரனிடம் இது குறித்து சசிகலா விவாதித்திருக்கிறார். ஆனால்  அதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது 

அதேபோல் தினகரன் கட்சியில் உள்ள முக்கியமானவர்களுக்கு அதிமுக தலைமை வலைவிரித்து வருவதாகவும் தேர்தலுக்கு முன் அதிமுகவுக்கு வருபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகள் தரப்படுவதாகவும்  தெரிகிறது.  என்ன செய்யப் போகிறார் தினகரன் என் கேள்வியே தற்போது எழுந்துள்ளது.