டிடிவி.தினகரன் நாடாளுமன்ற தோல்வியடையை அடுத்து அமமுக நிர்வாகிகள் தொடர்ந்து கட்சி மாறி வந்தனர். இந்த கட்சி மாறும் படலம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக டெபாசிட் வாங்க முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுக, அதிமுகவில் இணைந்து வந்தனர். அக்கட்சியில் நம்பிக்கையாக நட்சத்திரமாக திகழ்ந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா உள்ளிட்டோர் அதிமுக மற்றும் திமுகவில் இணைந்தனர். இதனால், இது டிடிவி.தினகரன் கட்சிக்கு பேரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. 

இதனால் கட்சியை பலப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அமமுக சார்பாக நடத்தப்பட்டது. மேலும், கட்சியை பதிவு செய்த பின்னரே தேர்தலில் போட்டியிடுவது என்று டிடிவி.தினகரன் தெரிவித்திருந்தார். இதனால், கட்சி தாவும் படலம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.  

இந்நிலையில், முன்னாள் எம்.பி. சிவசாமி அ.தி.மு.க. வீசிய வலையில் சிக்கியதால் அ.ம.மு.க. திருப்பூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கடந்த வாரம் நீக்கப்பட்டார். இவர், திருப்பூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்த சிவசாமி. கடந்த, 2001-06-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாகவும், 2009-ம் ஆண்டு திருப்பூர் தொகுதி எம்.பி.யாகவும் இருந்தார். இதன்பின், அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்த ஆனந்தன், அமைச்சரானபோது, உட்கட்சி பூசலால் அ.தி.மு.க.விலிருந்து சிவசாமி நீக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்குப்பின், தினகரன் கட்சியில் சேர்ந்த சிவசாமி, அ.ம.மு.க.வின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தேர்தல் பிரிவு இணை செயலளராகவும் வலம் வந்தார். இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

 

இந்நிலையில், முன்னாள் எம்.பி. சிவசாமி, உடுமலை முன்னாள் எம்.எல்.ஏ. சண்முகவேலு அவர்களின் ஏற்பாட்டின் பேரில் 275 நிர்வாகிகள் உட்பட 500 பேர் அக்கட்சியிலிருந்து விலகி இபிஎஸ், ஓபிஎஸ் முன்னிலையில் தாய் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, பொன்னையன், வைத்தியலிங்கம் எம்.பி ஆகியோரும் உடனிருந்தனர். கொங்கு மாவட்டத்தில் ஒன்றான திருப்பூர் நிர்வாகிகள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தது தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.