அமமுகவில் டி.டி.வி.தினகரன் அதிகமாக நம்பிக் கொண்டிருக்கும் வெற்றிவேல் அடுத்து கட்சியை விட்டு விலகுவார் என அக்கட்சியை சேர்ந்த தென் சென்னை மாவட்ட துனைப்பொதுச் செயலாளர் வைத்தி கூறியுள்ளார்.

 

தென் சென்னை மாவட்டகழக துணை செயலாளர் வைத்தி, தன்னைப்போன்றவர்களை கண்டுகொள்ளாமல் வெற்றிவேல் சொல்படி  டி.டி.வி.தினகரன் நடந்து கொள்வதால் கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் அவர் அமமுகவின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் கூறுகையில், ’’வெற்றிவேலின் ஆதிக்கம் அமமுகவில் அதிகம் இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலில் நிற்கும் போதே நிற்காதீர்கள். கட்சி உடைந்து விடும் என எடுத்துக் கூறினோம். ஆனால், வெற்றிவேல் அவருக்கு ஆசை காட்டி நிற்க வைத்து விட்டார். ஆர்.கே.நகரில் டி.டி.வி நிற்கவில்லை என்றால் இந்தக் கட்சி உடைந்திருக்காது. ஆர்.கே.நகரில் நிற்க மூளைச்சலவை செய்ததே வெற்றிவேல் தான். இந்த வெற்றிவேல் காங்கிர்ஸ் கட்சியில் இருந்தபோது அந்தக் கட்சியை உடைத்து தாமகவை உருவாக்க வைத்தார். அவரது வேலையே கட்சியை உடைப்பது தான். 

ஏற்கெனவே தளவாய் சுந்தரத்தை நம்பாதீங்கனு பலமுறை சொன்னோம். டி.டி.வியிடம் பல முறை சொன்னேன். அடுத்து தளவாய் போய்விட்டார். அடுத்து செந்தில் பாலாஜியை டி.டி.வி தலைமேல் தூக்கி வைச்சு ஆடிக்கொண்டு இருந்தார். அவரும் போய் விட்டார். இப்போது வெற்றிவேலை தலையில் வைத்து கொஞ்சுகிறார். அமமுக டி.டி.வி கையில் இல்லை. வெற்றிவேல் கையில்தான் இருக்கிறது. சின்னம்மா அமமுகவின் பொதுச்செயலாளர் இல்லை. அமமுகவுக்கு வெற்றிவேல் தான் பொதுச்செயலாளர். வெற்றிவேல் இன்னைக்கும் கராத்தே தியாகராஜனிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். 

அவர் மொபைலை எடுத்து பார்க்கச் சொல்லுங்க. சிதம்பரம், கார்த்திக் சிதம்பரத்துடனும் பேசிக் கொண்டு தான் இருக்கிறார். கூடிய சீக்கிரம் அமமுகவை விட்டு ஓடிவிடுவார். நாங்க அப்படி ஓட முடியாது. எங்களது அதிமுக ரத்தம். ஒன்று அமமுகவில் இருக்கணும். இல்ல அதிமுகவில் இருக்கனும். ஆரம்பத்துல தொண்டர்களை இன்முகத்தோட சந்திச்சார் டி.டி.வி அதை நம்பித்தான் நாங்கள் வந்தோம். அவரை நம்பி வந்த நாங்கள் இன்னைக்கு நடு ரோட்டில் நிற்கிறோம். டி.டி.விக்கு நாங்கள் பயப்படலாம். ஆனால், காங்கிரஸ், தாமகவில் இருந்து வந்த வெற்றிவேலுக்கு நாங்கள் ஏன் பயப்படணும்’’ என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.