உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்ததால் டிடிவி.தினகரன் கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் தினகரனின் அமமுக டெபாசிட் வாங்க முடியாமல் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், அதிருப்தி அடைந்த முன்னணி நிர்வாகிகளான செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா, புகழேந்தி ஆகியோர் திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், டிடிவி.தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து, நடந்த முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 90-க்கும் மேற்பட்ட ஒன்றியங்களை கைப்பற்றி ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளை அலறவிட்டார். அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்களில் வெற்றி பெற்றால் அதிமுக அதிர்ச்சியடைந்தது. 

இந்நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக கட்சியிலிருந்து விலகிய ராமநாதபுரம் கீழக்கரை நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 200 பேர் எடப்பாடியை முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதேபோல் அமமுகவிலிருந்து விலகிய முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய 13-வது,15-வது வார்டு உறுப்பினர்கள் அதிமுகவில் இணைந்தனர். உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் இணைந்ததால் தினகரன் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.