பாஜக தேசிய தலைவராக அமித் ஷாவே நீடிக்க வேண்டும் என அக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஜகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கை பின்பற்றப்படுகிறது. கடந்த முறை உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது கட்சியின் தலைவராக ராஜ்நாத் சிங் இருந்தார். அமைச்சரானதும் கட்சி தலைமை பொறுப்பை அமித் ஷாவிடம் ஒப்படைத்தார். இதேபோல தற்போது அமித் ஷா உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். எனவே கட்சி பொறுப்பு வேறு ஒருவரிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் பாஜகவில் கட்சியின் தலைவராக ஒருவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். அதுவும் இரு முறை மட்டுமே இருக்க முடியும் என்று பாஜக கட்சி விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமித் ஷா இரு முறை கட்சி தலைவராக இருந்துவிட்டார். எனவே, கட்சித் தலைமைக்கு வேறு ஒருவரை தேர்வு செய்யும் பணிகள் பாஜகவில் நடைபெற்றுவந்தன. இதுதொடர்பாக முடிவெடுக்க டெல்லியில் பாஜக மாநில தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


இக்கூட்டத்தில் வேறு ஒரு தலைவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இறுதிவரை தேசிய தலைவராக அமித் ஷாவே தொடருவார் என முடிவெடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா, அரியானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்த மாநிலங்களில் மீண்டும் பாஜகவை ஆட்சி பொறுப்பில் அமர்த்தும் பொறுப்பு கட்சித் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.


மத்திய பிரதேசம், ராஜஸ்தான். சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் வாக்களித்ததால், இந்த மாநிலங்களிலும் இப்படி நடந்துவிடக் கூடாது என்று அக்கட்சி கணக்கு போடுகிறது. அதன் காரணமாக, தேர்தலை எதிர்கொள்வதில் ஸ்பெஷலிஸ்ட்டான அமித் ஷாவே தலைவராக நீடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பாஜகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தும் பணிகளும் விரைவில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்தப் பணிகளுக்கு பிறகு புதிய தலைவரை தேர்வு செய்யலாம் எனப் பலரும் கருத்து தெரிவித்ததால், தற்போதைய நிலையில் அமித் ஷாவே கட்சியின் தேசிய தலைவராக தொடர முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிவரை தலைவர் பொறுப்பில் மாற்றம் இருக்காது என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.