பாகிஸ்தான் செய்துள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிரடியாக அறிவித்துள்ளார்.
கடந்த 71 ஆண்டுகளாக ஜம்மு - காஷ்மீருக்கென வழங்கப்பட்டுவந்த 370-வது சட்டப் பிரிவுன் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகவும் ஜம்மு - காஷ்மீர் பிரிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் மறு சீரமைப்பு தீர்மானத்தை மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கொண்டுவந்தார். அந்தத் தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேறியது. மக்களவையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேறியது. முன்னதாக மசோதா மீதான விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்போது, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும் என்று குறிப்பிட்டார்.
 “காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஜம்மு-காஷ்மீர் என்று குறிப்பிடும்போது அது பாகிஸ்தான் செய்துள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரையும், சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின்னையும் சேர்த்து குறிக்கும். அக்சாய் சின் இணைந்த லடாக் பகுதி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாக மாறுகிறது. லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர், எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை இருக்கும்.” என்று தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன், காஷ்மீர் தொடர்பான புதிய வழிமுறைகள் அனைத்தும் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆக்கிரமிப்புகளுக்கு பொருந்துமா? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் அனைத்தும் காஷ்மீரின் அங்கம்தான். ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள காஷ்மீரை நாங்கள் மீட்போம். அதற்காக உயிரைக் கொடுக்கவும் தயார்” என்று ஆவேசமாக கூறினார்.
இந்தியா சுதந்திரத்துக்கு பிறகு தனித்து இயங்கிய ஜம்மு காஷ்மீரை பாகிஸ்தான் படை புகுந்து ஆக்கிரமிப்பு செய்தது. அப்போது இந்திய உதவியை நாடிய காஷ்மீர் மன்னர் ஹரிசிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்தார். என்றாலும் பாகிஸ்தான் ஆக்கிரப்பு செய்த பகுதி இன்னும் அவர்கள் வசமே உள்ளது. இதேபோல இந்திய - சீன போரின்போது காஷ்மீரில் உள்ள அக்சாய்சின்னை சீனா ஆக்கிரமிப்பு செய்தது. தற்போது  ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இரு பகுதிகளையும் மீட்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி, பாகிஸ்தானுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளார்.