நவம்பர் 21ம் தேதி தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வேல் யாத்திரையில் பங்கேற்கமாட்டார் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரை வெற்றி வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், தமிழக அரசு கொரோனா காரணம் காட்டி அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து, தடையை மீறி பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த வேல் யாத்திரையில் பங்கேற்பதற்காக அமித்ஷா சென்னை வருவதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், இது தொடர்பாக எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு மற்றும் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். சென்னையில் அவரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வேல் யாத்திரையில் பங்கேற்க மாட்டார். 21ம் தேதி வேல் யாத்திரை கோவையில் இருக்கும் என்பதால் யாத்திரையில் அமித் ஷா கலந்துகொள்ள மாட்டார். 

மேலும், மத்திய அமைச்சர் அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளது. அமித் ஷாவின் தமிழக வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை தரும் என எல்.முருகன் கூறியுள்ளார்.