எந்த ஊரில் வாரிசு இல்லை, இதுபோன்று எல்லாம் அமித்ஷா பீகாரில் தான் பேச வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான அமித் ஷா, அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மதியம் சென்னை வந்தார். அவரை முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் ஓய்வெடுக்கச் சென்றார். பின்னர் 4:30 மணிக்கு ஹோட்டலில் இருந்து அமித் ஷா கலைவாணர் அரங்கம் புறப்பட்டார். அங்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அமித் ஷாவை வரவேற்றனர். கலைவாணர் அரங்கில் மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு அமித் ஷா மலர்தூவி மரியாதை செய்தார். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா தமிழக அரசின் செயல்பாடுகளைப் பாராட்டினார். ``உலகத்தின் தொன்மையான மொழியான தமிழில் என்னால் உரையாற்ற முடியாது. ஏனென்றால், எனக்குத் தமிழ் தெரியாது. தமிழ் மொழியில் பேச முடியாததற்கு முதலில் மன்னிப்புக் கோருகிறேன் என்றார்.

மேலும், நான் சிறிது காலம் இடைவெளிவிட்டுத் தமிழகம் வந்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் அரசியல் பேசுகிறேன். இந்தியாவில் வாரிசு அரசியலைப் படிப்படியாக பா.ஜ.க ஒழித்து வந்திருக்கிறது. தமிழகத்திலும் அதை நாங்கள் செய்வோம். தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முடிவு கட்டுவோம். எங்கள் மீது ஊழல் குற்றசாட்டுவைக்கும் முன்னர் உங்கள் குடும்பம் செய்ததைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என காட்டாக கூறியிருந்தார்.

இந்நிலையில், வேலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்;- எந்த ஊரில் வாரிசு இல்லை, இதுபோன்று எல்லாம் அமித்ஷா பீகாரில் தான் பேச வேண்டும். பாஜகவிலும் நிறைய பேர் வாரிசு அரசியல் செய்கிறார்கள். அவற்றையெல்லாம் ஒழித்து விட்டாரா அமித்ஷா? திமுகவை மிரட்டுவது போல் அமித்ஷா அரசு விழாவில் பேசியுள்ளார். அரசு விழா மேடையை அரசியல் மேடையாக மாற்றி எதிர்க்கட்சியினரை அமித்ஷா வசைபாடி சென்றுள்ளார். அரசியலுக்கும் அரசுக்கும் வித்தியாசம் தெரியாமல் போனால் ஜனநாயகம் அழிந்து சர்வாதிகாரம் தலைதூக்கும் என  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.