கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது. கர்நாடகாவை கைப்பற்றும் முயற்சியில் பாஜகவும் காங்கிரஸும் தீவிரம் காட்டிவருகின்றன.

மத்தியில் 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தபிறகு, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சல பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. அந்த வரிசையில், கர்நாடகாவிலும் ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரம் காட்டிவருகிறது. 

அதேநேரத்தில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் ஆட்சியமைக்க முடியாமல், தோல்வியை சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சி, தாங்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் கர்நாடகாவில் ஆட்சியை தக்கவைக்க தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

கர்நாடகாவை கைப்பற்ற பாஜக மற்றும் காங்கிரஸ் தீவிரம் காட்டுவதால், பிரதமர் மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய தேசிய தலைவர்கள் கர்நாடகாவில் களத்தில் குதித்துள்ளனர். பாஜகவும் காங்கிரஸும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

சமகால அரசியலில் சமூக நீதி, மாநில சுயாட்சி ஆகியவற்றை முன்னிறுத்தும் தென்மாநில முதல்வர்களில் முதன்மையானவராக கர்நாடக முதல்வர் சித்தராமையா திகழ்கிறார்.

இந்நிலையில், சமூகநீதி பேசும் சித்தராமையாவை அமித் ஷா கிண்டல் செய்துள்ளார். கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, ரூ.40 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரம் கட்டும் ஒரே சமூகநீதி தலைவர் கர்நாடக முதல்வர் சித்தராமையா தான் என கிண்டல் செய்தார். இதுவே அவரது ஊழல் அரசுக்கு ஒரு சான்றாகும் என அமித் ஷா விமர்சித்தார்.