நிஃபா வைரசை கட்டுப்படுத்துவதில் உலகத்துக்கே முன்மாதிரியாக கேரள அரசு செயல்பட்டதாக  அம்மாநில  முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு  அமெரிக்காவின் வைராலஜி ஆய்வகத்தின் நிறுவனரும் மருத்துவ ஆராய்ச்சியாளருமான டாக்டர். ராபர்ட் சி.கேலோ பரிசளித்து பாராட்டு தெரிவித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் கடந்த மாதம் திடீரென நிஃபா என்ற ஒரு வகை வைரஸ் காய்ச்சல் பரவியது. இதில் 17 பேர் உயிரிழந்தனர். ஆனால் கேரள அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு நிஃபா வைரசை முற்றிலுமாக ஒழித்தது. இதையடுத்து கேரள முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிலையில் முதலமைச்சர் பினராயி விஜயன்  அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு  ராபர்ட் கெலோயும் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகளும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் முதலமைச்சர்  பினராயி விஜயனுடனும் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவுடனும் கேரளத்தில் நிஃபா வைரசை கட்டுப்படுத்தியது குறித்து விவாதித்தனர்.

ஆராய்ச்சித் துறையில் கேரள அரசின் ஒத்துழைப்புடன் திருவனந்தபுரத்தி்ல் அமையவிருக்கும் சர்வதேச வைராலஜி நிறுவனத்தின் செயல்பாடு குறித்தும் விவாதித்தனர். பின்னர் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் டாக்டர். ராபர்ட் சி.கேலோ, நிறுவனத்தின் கிளினிக்கல் வைராலஜி இயக்குநர் சியாம்சுந்தர் கொட்டிலில் ஆகியோர் பேசினர்.

முதலமைச்சர்  பினராயி விஜயனும் அமைச்சர் கே.கே.ஷைலஜாவும் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசினர்.கேரளத்தின் சுகாதாரத்துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் சர்வதேச அளவிலான மிக உயர்ந்த விருதினை, இன்ஸ்டிட்யூட் ஆப் ஹியூமன் வைராலஜி நிறுவனத்திடமிருந்து முதலமைச்சரும்  சுகாதாரத்துறை அமைச்சரும் பெற்றுக் கொண்டனர்..

1996 இல் அமைக்கப்பட்ட இந்த நிறுவனம் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராட்டுதெரிவித்து பரிசளித்திருப்பது இதுவே முதல்முறையாகும். நிபா வைரசை கட்டுப்படுத்தியதில் கேரள அரசு மேற்கொண்ட மிக முக்கியமான - விரைவான நடவடிக்கைகளை ஆய்வு செய்த பிறகே முதலமைச்சர்  பினராயி விஜயனை அழைக்க இந்நிறுவனம் முடிவு செய் தது. ஹியூமன் வைராலஜியில் உலக அளவில் ஐஎச்வி என்பது புகழ் பெற்ற நிறுவனமாகும்.