கைதிகளின் பற்களை கொடூரமாக பிடுங்கிய ஏஎஸ்பி. பல்வீர் சிங்.. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பணியாற்றி வந்தவர். இவர் அங்கு பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்ற வழக்குகளில் ஈடுபடும் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களது பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்டதாக புகாரை அடுத்து அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பணியாற்றி வந்தவர். இவர் அங்கு பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சிறிய குற்ற வழக்குகளில் ஈடுபடும் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களது பற்களை பிடுங்கித் துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சம்பவம் தொடர்பான தகவல் சமூக வலைதளங்களிலும் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பதில் அளித்த முதல்வர் அம்பை ஏஎஸ்வி விவகாரத்தில் புகார் வந்த உடனேயே விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. உடனடியாக அந்த ஏஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன்.
முழுமையான விசாரணை அறிக்கை வந்த உடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவையெல்லாமே சம்பவம் நடைபெற்ற உடனேயே இந்த அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகள் ஆகும். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2 ஆண்டுகளில், ஜாதி மோதல்கள், ரௌடிகளால் நடத்தப்பட்ட கொலைகள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. 2019-ல், கடந்த அதிமுக ஆட்சியில், 1,670 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. தி.மு.க. ஆட்சியில், அதாவது, 2022-ல் அது 1,596 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டு ஒன்றுக்கு 74 கொலைகள் இந்த ஆட்சியில்தான் குறைக்கப்பட்டுள்ளன; அப்படிச் சொல்வதை விட அது தடுக்கப்பட்டிருக்கிறது.
நமது ஆட்சியைப் பொறுத்தவரை, காவல் துறை சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்பட்டு, கொலையாளிகள் யாராக இருந்தாலும், கொலை செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், அதில் எந்தவிதமான பாரபட்சமோ, அரசியலோ எதுவும் பார்க்காமல், உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து கொள்கிறேன் என்றார்.