சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நடிகர் ரஜினியுடன் மூன்று முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அளவில் பிரபலமானவர் ரவீந்திரன் துரைசாமி. அரசியல் விமர்சகர் என்று அறியப்படும் இவர் தனது கருத்துகளை தெளிவாக எடுத்து முன் வைக்க கூடியவர். மேலும் தமிழகத்தின் அரசியல் நகர்வுகளையும் முன்கூட்டியே கணித்து சரியாக கூறக்கூடியவர். கடந்த காலங்களில் தேர்தல் கூட்டணிகளை ரவீந்திரன் துரைசாமி பல முறை சரியாக கணித்துள்ளார். இதே போல் தமிழக வாக்கு வங்கி, அரசியல் களம் போன்றவற்றை பற்றியும் நன்கு அறிந்தவர். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு இவர் ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார். அந்த வகையில் இவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நெருங்கிய நண்பர்கள்.

ரஜினியுடனும் ரவீந்திரன் துரைசாமிக்கு நெருங்கிய நட்பு உண்டு. ரஜினி அவ்வப்போது ரவீந்திரன் துரைசாமியை அழைத்து தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிவது உண்டு. அதே போல் சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் ரஜினியின் அரசியல் நகர்வுகளை கணித்து ஓரளவிற்கு சரியாக பேசக்கூடியவர் ரவீந்திரன் துரைசாமி. இவர் அண்மையில் ஆன்லைன் இணையதளத்திற்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் ரவீந்திரன் துரைசாமி ரஜினியின் அரசியல் நகர்வுகள் குறித்து பேசியுள்ளார். மேலும் அடுத்த தேர்தலில் ரஜினி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதோடு மட்டும் அல்லாமல் சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கூட்டணி அமைக்க தற்போதே 3 கட்சிகள் தயாராகிவிட்டதாகவும் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். மூன்று பேருமே ரஜினியுடன் நேரடியாக பேசி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தலைவர்களில் இரண்டு பேர் தனக்கு நெருக்கமானவர்கள் என்றும் தன் மூலமாக அவர்கள் ரஜினியை தொடர்பு கொண்டு இருப்பதாகவும் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். மற்றொரு தலைவர் வேறொரு நபர் மூலம் ரஜினியை தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மூன்று தலைவர்களுமே ரஜினியை கூட்டணிக்கான தலைமை பொறுப்பை ஏற்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருவதாகவும் தங்களுக்கு தேவையான தொகுதிகளின் எண்ணிக்கை வரை ரஜினியிடம் அந்த கட்சி தலைவர்கள் கூறிவிட்டதாகவும், மேலும் சில விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் அந்த தலைவர்கள் மூன்று பேரும் யார் என்பதை தற்போது வெளிப்படையாக கூற இயலாது என்று ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார். இது உண்மையா என்பது குறித்து ரஜினி மன்ற தரப்பில் விசாரித்த போது, உண்மை என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் மூன்று தலைவர்களும் ரஜினியை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இப்போது வேண்டாம் என்று கூறியுள்ள ரஜினி தொடர்ந்து தொலைபேசி, வீடியோ கால் மூலம் அவர்களுடன் பேசி வருவதாகவும் ரஜினி பெரும்பாலும் தமிழக அரசியல் நிலவரம் கடந்த கால அரசியல், தேர்தல் முடிவுகள் பற்றியே அவர்களிடம் பேசுவதாகவும் தற்போது வரை கூட்டணிக்கு தலைமை ஏற்க ஒப்புதல் தெரிவிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தலைவர்களோ தற்போதையே சூழலில் திமுகவை எதிர்கொள்ள உங்களைப்போன்ற மாஸ் லீடரால் தான் முடியும் எனவே தயங்காமல் அரசியல் கட்சியை துவங்குங்கள் மற்றதை பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஊரடங்கு நேரத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சு போயஸ் கார்டனில் நடைபெற்று வருவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. ஆனால் அந்த மூன்று கட்சியில் ஒரு கட்சி ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் கட்சி என்பது தான் இதில் ஹைலைட் என்று கூறுகிறார்கள்.