எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை காலை10:30 மணிக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்பது குறித்து அதில் ஆலோசிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திப்பதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும் அதற்கான காய் நகர்த்தல் வேலைகளிலும் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வழக்கம்போல அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையே நேரடி போட்டி இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில்  தமிழகத்தில் மும்முனை போட்டி ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திரையுலக செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்கிய  விஜயகாந்த் தற்போது 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. திரை செல்வாக்கை பயன்படுத்தி தனக்கு பின்னால் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினிகாந்த் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட திட்டமிட்டு வருவதாக வெளியான தகவலையடுத்து, விஜயகாந்த்தும் அதே மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இந்த நொடி வரை அதிமுக கூட்டணியில் இடம்பெற்று இருப்பதாகவும், ஆனாலும் 234 தொகுதியிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 

விஜயகாந்த் தலைமையில் நடக்கும் கட்சி பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் இது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார், இந்நிலையில் தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்கேற்கிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியை தொடர்வதா அல்லது தனித்துப் போட்டியிடுவதா என்பது  குறித்தும் அவர் மாவட்ட செயலாளரிடம் கருத்து கேட்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.