நாடாளுமன்ற கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.க வேண்டாம் என்பதில் ராமதாஸ் மிகவும் பிடிவாதம் காட்டுவதாகவும், இதனால் அன்புமணி அப்செட்டாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை திரை மறைவில் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் பா.ம.கவை தங்கள் அணிக்குள் கொண்டு வர தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுமே பிரம்ம பிரயத்தனம் செய்து வருகின்றன. பா.ம.கவை கூட்டணியில் சேர்க்க ஸ்டாலின் முழு மனதுடன் முயற்சிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. வட மாவட்ட தி.மு.க நிர்வாகிகளின் நச்சரிப்பே பா.ம.க தரப்பில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு ஸ்டாலின் சம்மதம் தெரிவிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது. 

பா.ம.கவுடன் கூட்டணி சேர்ந்தால் தி.மு.கவுடன் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது. எனவே அவர்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு தொகுதி மிச்சம். மேலும் 4 தொகுதிகள் என 5 தொகுதிகளை ஒதுக்கினால் பா.ம.க நம்முடன் வந்துவிடுவார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தி வரும் வட மாவட்ட தி.மு.கவின் மிக முக்கிய புள்ளி ஸ்டாலினிடம் மீண்டும் மீண்டும் கூறி வருகிறாராம். ஆனால் ஸ்டாலின் தரப்போ பா.ம.கவிற்கு 4 தொகுதிகளுக்கு மேல் ஒரு தொகுதி கூட கிடையாது என்பதில் உறுதியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 

அன்புமணி தரப்போ ஸ்டாலினுடன் கூட்டணி வைக்க துளி கூட விரும்பவில்லை என்கிறார்கள். அன்புமணியை பொறுத்தவரை அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் இணைந்து செயல்படவே விரும்புவதாக சொல்கிறார்கள். அதனால் தான் அன்புமணி தரப்பு அ.தி.மு.கவுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். முதலில் 6 தொகுதிகள் என்று வலை வீசிய அ.தி.மு.க அன்புமணி பக்கத்தில் இருந்து சாதகமான வார்த்தைகள் வந்ததும் தொகுதிகளை குறைத்துவிட்டதாக சொல்கிறார்கள். 

அதாவது ராமதாஸ் தி.மு.கவுடன் பேசி வருவதும், தி.மு.க 4 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருப்பதும் தெரிந்து அன்புமணியையும் அடி மாட்டு தொகுதிக்கு அ.தி.மு.க தரப்பு பேரம் பேசுவதாக சொல்கிறார்கள். இதனால் பா.ம.கவில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மனக்கசப்பு அதிகமாவதாகவும் கூறுகிறார்கள். நேற்று முன் தினம் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது கூட்டணி விவகாரத்தில் இருவருக்கும் இருக்கும் முரண்பாடு அப்பட்டமாக வெளிப்பட்டது. 

செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டணி குறித்து பேச மிகவும் ஆர்வமாக இருந்தார் ராமதாஸ். முதலில் காமெடியாக பேசினாலும் பின்னர் சீரியசானார் ஆனால் அன்புமணியே ராமதாசை பேச விடாமல் தடுத்தார். மேலும் கூட்டணி குறித்த கேள்வியே வேண்டாம் என்று செய்தியாளர்களுக்கும் ஒரு கும்பிட போட்டார். அதாவது கூட்டணி குறித்து தனது மனதில் இருப்பதற்கு எதிராக ராமதாஸ் எதுவும் பேசிவிடக்கூடாது என்றே அன்புமணி அங்கு முந்திக் கொண்டதாக சொல்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அன்புமணி சொன்னது தான் நடைபெற்றது. ஆனால் இந்த முறை தான் சொல்வது தான் நடைபெறும் என்று பா.ம.க நிர்வாகிகளுக்கு தாக்கீது அனுப்பி வருகிறாராம் ராமதாஸ். மேலும் தி.மு.க கூட்டணியில் 5 தொகுதிகளை வாங்குவது உறுதி என்றும் ராமதாஸ் தரப்பு தில்லாக தகவல்களை தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு தெரிவித்து வருவதாகவும் கூறுகிறார்கள்.