சூழலியலை தகர்க்கும் சட்டம் என்ற தலைப்பிலான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தொடர்பான காணொலி காட்சி கருத்தரங்கம் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர், இந்து ராம், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், திமுக நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திமுக தலைவர் ஸ்டாலின் அதில் ஆற்றிய உரை:- 

சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கே கொண்டு வந்துள்ள சட்டம் அதனை கெடுப்பதாக அமைந்துள்ளது. மேலும்  ஏராளமான திட்டங்களையோ, தொழிற்சாலைகளையோ எதிர்க்கவில்லை. அவை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக இருக்கக்கூடாது. 6 மாதத்திற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கையை ஆண்டுக்கு ஒருமுறை தாக்கல் செய்யலாம் என மாற்றம் செய்துள்ளனர். மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு கொண்டு வந்த அத்தனை திட்டங்களும் மக்களுக்கு விரோதமாகவும் மாநில அரசுக்கு விரோதமாகவும் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் இருக்கிறது.

  

ஒரே நாடு என்ற அடிப்படையில் கொண்டு வரப்படும் அனைத்து சட்டங்களும் மாநில அரசுகளே இல்லாமல் ஆக்கும் சட்டங்களாக இருக்கிறது. உதாரணத்திற்கு  புதிய கல்விக்கொள்கை திட்டம் அது கல்வித் திட்டத்தையே அழிக்க போகிறது. நீட் தேர்வு கொண்டுவந்து மருத்துவ கனவையே சிதைத்து விட்டார்கள்,  பொருளாதாரத் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை, அதேபோல் குடியுரிமை சட்டம் கொண்டு வந்து மக்களின் வாழ்வாதாரத்தைக் கெடுத்தார்கள். இந்த வரிசையில் தற்பொழுது சுற்றுச்சூழல் திட்டத்தைக் கொண்டுவந்து சூழலையே காலி செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. சுற்றுச்சூழலை இதைவிட யாரும் கொச்சைப்படுத்த முடியாது. அதற்கு அந்த சட்டத்தையே ரத்து செய்துவிடலாமே. இப்படியே போனால் மக்கள் கதி என்ன என்பதுதான் கேள்வி. 

இந்த சட்டம் தனியார்,மற்றும்  பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழி வகுக்கும் சட்டமாக உள்ளது. சுற்றுச்சூழல் தொடர்பாக எந்த திட்டம் வந்தாலும் மக்களின்  கருத்தை கேட்க  வேண்டும்.மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது. இந்த சட்டம் அமலானால் மக்கள் விரோத திட்டங்களை கேள்வியே கேட்க முடியாது. உதாரணமாக  ஹைட்ரோ கார்பன், 8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் விரிவாக்கம் போன்ற வற்றை கேள்வியே கேட்க முடியாது. மாநில அரசு அமைதியாக இருக்கிறது, மாநில அரசின் சேர்க்கை தவறானது.சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நாடாளுமன்ற கூட்டத்திடரில் மக்களின் குரலாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒலிப்பார்கள். திமுக ஆட்சியில் சூழலை காக்க முன்னுரிமை. அளிக்கபடும் என உறுதி அளிக்கிறேன்.