தமிழகத்தை அழிக்க வந்த தேசத்துரோகி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் என பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா ஆவேசமாக பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில், பங்கேற்ற பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறுகையில், அண்ணா அறிவாலயத்தின் மூல பத்திரத்தை மு.க.ஸ்டாலின் காட்டாததன் மூலம் திமுகவின் சொத்துக்கள் அனைத்தும் பஞ்சமி நிலத்தில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சொத்துக்கள் அனைத்தையும் தமிழக அரசு ஆய்வு செய்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

மேலும், மறைந்த தமிழக முதல்வா் ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு காவல்துறையை திமுகவிற்காகத்தான் உருவாக்கினார். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக படுதோல்வி அடையும் என கூறினார். 

சீமான் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் சீமான் ஒரு தேசத்துரோகி. தமிழ்நாடு அரசு அவரை உடனடியாக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவேண்டும்.

இலங்கைத் தமிழர்களுக்காகச் சீமான் இதுவரை என்ன செய்துவிட்டார். சீமானைப் போன்ற தீய சக்திகள், பிரிவினைவாதிகள் சமுதாயத்தில் நடமாட அருகதை இல்லாதவர்கள். தமிழ் மக்களை திசை திருப்புவதற்காக தற்போது சீமான் இதுபோன்ற கருத்துக்களை பேசி வருகிறார் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து ஹெச்.ராஜா பேசினார்.