அதிமுக கூட்டணியில் பாமகவுடன் மட்டுமே தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ளது. கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளது. பாஜக கூட்டணியில் 30 தொகுதிகள் வரை கேட்கிறது. ஆனால், 21 தொகுதிகள் மட்டுமே வழங்க அதிமுக முன்வந்துள்ளது. இதனால், கூட்டணி உடன்பாடு காணாமல் இழுபறியில் உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் நிச்சயம் வெற்றி பெறும். தமிழகம் முழுவதும் நாங்கள் வெற்றிக்கொடி யாத்திரை சென்றுகொண்டிருக்கிறோம். அனைத்து இடங்களிலுமே பாஜகவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு இறுதியாகிவிடும்.” என்று சி.டி.ரவி தெரிவித்தார்.