டெல்லியில் மாநில பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு தேர்வு உட்பட அனைத்து தேர்வுகளையும் ரத்து  செய்யப்படுவதாக துணை முதல்வர் சிசோடியா அறிவித்துள்ளார். 

கொரோனா பரவல் காரணமாக வரும் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. இதனையடுத்து, கல்லூரிகளில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 இந்த முடிவிற்கு தமிழக அரசு, இப்போதுள்ள நிலையில் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி தேர்வுகளை முடிப்பது என்பது இயலாத காரியம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில், டெல்லியில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில துணை முதல்வர் மணிஷ் சிசோடியா அறிவித்துள்ளார். 

இது குறித்து அவரது டுவிட்டர் பதிவில்;- கொரோனா அச்சுறுத்தலால் டெல்லியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இறுதி ஆண்டு தேர்வுகள் உள்பட அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் முடிவு செய்யும் மதிப்பீடு அளவுகளை அடிப்படையாக கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.